Last Updated : 31 Aug, 2020 01:26 PM

 

Published : 31 Aug 2020 01:26 PM
Last Updated : 31 Aug 2020 01:26 PM

கிழக்கு லடாக்கில் மீண்டும் மோதல்: சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டே ஏரிப் பகுதியின் தென்பகுதி கரையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்து, தடுத்து நிறுத்தினர் என்று இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன, இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தின் தரப்பிலும் அதிகமான உயிர் சேதம் ஏற்பட்டபோதிலும் அதை வெளியிடவில்லை.

இந்தச் சூழலில் இரு நாடுகளின் எல்லைகளிலும் போர் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் ராணுவ உயர் அதிகாரிகள் தலைமையில் 5 கட்டப் பேச்சு நடந்து அமைதி திரும்பியது. இது தவிர இந்தியாவின் தரப்பில் பாதுகாப்புத் துறை தலைமை ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்திய பேச்சுக்குப் பின், இரு படைகளும் நிலையிலிருந்து வாபஸ் பெற்றன.

சீன ராணுவமும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டாலும் முழுமையாகச் செல்லவில்லை என்றே தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் கடந்த 29 மற்றும் 30-ம் தேதிகளில் பாங்காங் ஏரிப் பகுதியில் ஏற்கெனவே இருக்கும் பகுதியைத் தன்னிச்சையாக மாற்றும் நடவடிக்கையில் சீன ராணுவத்தினர் முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பாவது:

''கடந்த 29 மற்றும் 30-ம் தேதிகளில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் தென் கரைப்பகுதியில் இருக்கும் நிலையான பகுதிகளை சீன ராணுவத்தினர் தன்னிச்சையாக மாற்ற முயன்று அத்துமீறினர்.

ஏற்கெனவே, இரு நாட்டு ராணுவத்துக்கும் நிர்வாக ரீதியில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்து ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ள நிலையில், அதைக் குலைக்கும் வகையில், சீன ராணுவம் நடந்துகொண்டது. சீன ராணுவத்தினர் ஆத்திரமூட்டும் வகையில் பாங்காங் ஏரிப்பகுதியில் செயல்களைச் செய்தனர்.

ஆனால், சீன ராணுவத்தினரின் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் அவர்களை அத்துமீறி நடக்கும் முயற்சிக்கும், ஆத்திரமூட்டும் செயல்களையும் தடுப்பு நிறுத்தி முறியடித்தனர். மேலும், நம்முடைய எல்லைப் பகுதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பாங்காங் ஏரிப் பகுதியை மாற்றுவதற்குத் தன்னிச்சையாக மாற்ற முயற்சி எடுத்த சீன ராணுவத்தின் செயல் முறியடிக்கப்பட்டது

தற்போது இரு நாட்டு ராணுவத்தின் பிரிகேட் கமாண்டர் அளவிலான ஆலோசனைக் கூட்டம் சூசுல் பகுதியில் நடந்து வருகிறது. எல்லைப் பகுதியில் அமைதியையும், நிலைத்தன்மையையும் பேச்சுவார்த்தை மூலமே நிலைநாட்டவே இந்திய ராணுவம் விரும்புகிறது. அதேசமயம், எல்லை ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கவும் உறுதி பூண்டுள்ளது''.

இவ்வாறு ஆனந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த வாரம் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் அளித்த ஒரு பேட்டியில், “எல்லையில் சீனாவின் ராணுவம் மற்றும் தூதரக அளவில் பேச்சு நடத்துவது பலன் அளிக்காவிட்டால், ராணுவ ரீதியான நடவடிக்கைக்கும் இந்தியா தயாராக இருக்கிறது” என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x