Last Updated : 31 Aug, 2020 12:43 PM

 

Published : 31 Aug 2020 12:43 PM
Last Updated : 31 Aug 2020 12:43 PM

கரோனா முடிவுக்கு வரும்வரை தலைவர் தேர்தல் சாத்தியமல்ல; காந்தி குடும்பமே பதவிக்கு உகந்தது: காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து

புதுடெல்லி

கரோனா பரவல் முடிவிற்கு வரும்வரை காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சாத்தியமல்ல என்றும், இப்பதவிக்குக் காந்தி குடும்பமே உகந்தது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்துக் கூறியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் தேல்வியால் ராகுல் ராஜினாமா செய்தும், அகில இந்திய காங்கிரஸில் உருவான பிரச்சனைகள் முடிவிற்கு வந்தபாடில்லை. இதன் உச்சமாக குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் பத்திரிகைகளில் கசிந்தது.

இதனால், முதன்முறையாகக் கடும்கோபமுற்ற சோனியா காந்தி, தன் பொறுப்புத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். இத்துடன், கடிதத்தை வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கட்சியின் கட்டுக்கோப்பைக் காக்க விரும்பினார். ஆனால், கட்சியின் காரியக் கமிட்டியில் சில மூத்த தலைவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க, தலைவர் பதவியை சோனியாவே மீண்டும் ஏற்றார். கடிதத்தை வெளியிட்டவர்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

இந்நிலையில், கடிதம் எழுதிய காரணத்திற்காகத் தனித்து விடப்பட்ட குலாம் நபி ஆசாத், மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதில் அவர், ’கட்சிக்கு நிரந்தரத் தலைவரை அமர்த்தவில்லை எனில் அடுத்த 50 வருடங்களுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்கும்’ என்று சொன்னது மீண்டும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

இதில், கரோனா பரவல் முடிவிற்கு வரும்வரை கட்சித் தலைவர் தேர்தல் சாத்தியமல்ல என்றும், இப்பதவிக்குக் காந்தி குடும்பத்தினரையே பெரும்பாலான காங்கிரஸார் விரும்புவதாகவும் ஒரு கருத்து வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ''இதுவரை காங்கிரஸ் தலைவருக்கு ஐந்து முறை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய கட்சி நிலவரப்படி அடுத்த தலைவரும் தேர்தல் நடத்தியே தேர்வாகும் வாய்ப்புகள் உள்ளன. இதற்காக, தேசிய மற்றும் மாநிலங்கள் அளவில் சுமார் 18,000 வாக்குகள் பதிவு செய்வது கரோனா பரவலில் சாத்தியமல்ல.

காந்தி குடும்பத்தினரால் ஓரளவிற்காவது கட்டுக்கோப்பாகக் கட்சியை வைத்திருக்கமுடியும். இத்திறன் காங்கிரஸின் மற்ற தலைவர்களிடம் இதுவரை உருவாகவில்லை. எனவே, அக்குடும்பத்தினரின் தியாகத்தால் பெரும்பாலான காங்கிரஸார், குடும்பத்தில் ஒருவரையே தலைவராக்க விரும்புகின்றனர்'' எனத் தெரிவித்தனர்.

இதுபோல், குடும்ப அரசியலை நியாயப்படுத்த மற்ற சில அரசியல் கட்சிகளையும் காங்கிரஸார் உதாரணமாக்குகின்றனர். இப்பட்டியலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் திமுக என அடுக்குகின்றனர்.

எனவே, கரோனாவிற்குப் பிறகு நடைபெறும் கட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா, ராகுல் அல்லது பிரியங்கா தேர்வாகும் வாய்ப்புகள் தெரிகின்றன.

இதனிடையே, சில மூத்த தலைவர்கள் ஆதரவுடன் குலாம் நபி கடிதம் எழுதிப் பிரச்சனை கிளப்பியதற்கான காரணம் தெரிந்துள்ளது முடிவிற்கு வரவுள்ள அவர் வகிக்கும் மாநிலங்களவை எம்.பி. பதவியே இதற்குக் காரணமாக்கப்படுகிறது. குலாம் நபியை மீண்டும் எம்.பி.யாக்கக் காங்கிரஸிடம் எந்த மாநிலங்களிலும் வாய்ப்பில்லாமல் உள்ளது. இதையும் மீறி குலாம் நபி, கட்சிக்கு நெருக்கடி அளித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், குலாம் நபி மீது நடவடிக்கை எடுக்கும்படி உ.பி. காங்கிரஸ் தமது தலைமைக்குக் கடிதம் எழுதி இருக்கிறது

இந்தச் சூழலில், பொறுப்புத் தலைவராக இருந்த சோனியா, புதிய தலைவருக்கான தேர்தல் நடத்தாதற்கான காரணங்களையும் காங்கிரஸ் நிர்வாகிகள் அடுக்குகின்றனர். இதுபற்றிக் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ''சோனியா பொறுப்பேற்ற சில மாதங்களில் ஹரியாணா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சி அமைத்த காங்கிரஸ், ஹரியாணாவில் பாஜகவைத் தனி மெஜாரிட்டி நிலையில் இருந்து இறக்கியது. இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பாஜக கவிழ்த்தது.

இதே நெருக்கடியைப் பாஜக ராஜஸ்தானில் அளித்தபோது அதைச் சமாளித்து ஆட்சியைக் காத்தார் சோனியா. இதற்கு முன்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டம், மார்ச் முதல் தொடங்கிய கரோனா பரவல் ஆகியவற்றால் தேர்தல் நடத்த முடியாமல் போனது'' என விளக்குகின்றனர்.

ஒத்த கருத்தில் தலைவர்கள் தேர்வு

காங்கிரஸ் தொடங்கியது முதல் அதன் பெரும்பாலான தலைவர்கள் ஒத்த கருத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் வரலாற்றில் ஐந்து பேருக்காக மட்டுமே வாக்குப் பதிவிற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.

கடைசியாக 1999-ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவில் சோனியா, உ.பி.யைச் சேர்ந்த ஜிதேந்தர் பிரசாத்தை எதிர்த்து வெற்றி பெற்றார். அதற்கு முன்பாக 1997-ன் வாக்குப்பதிவில் ராஜேஷ் பைலட் மற்றும் சரத்பவாரை எதிர்த்து சீதாராம் கேசரி வென்றிருந்தார். 1950-ல் ஆச்சார்யா கிருபளானியை எதிர்த்து புருஷோத்தம் தாஸ் டாண்டன் வென்றிருந்தார். 1938-ல் மகாத்மா காந்தியால் ஆதரிக்கப்பட்ட பட்டாபி சீதாராமைய்யாவை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைவரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x