

பிஹாரில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் எம்.பி.யின் ஆதரவாளர்கள் நேற்று ரயில்களை நிறுத்தி நடத்திய போராட்டத்தால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மணிப்பூரில் பிஹார்வாசிகளுக்கு எதிரான வன்முறையை கண்டித்து பப்பு யாதவின் ஜன் அதிகார் கட்சி (ஜேஏபி) இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இதனால் மாநிலம் முழுவ தும் பல மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
“மணிப்பூரில் நிலைமை மேம்படாவிட்டால், பிஹார் வழியாக ரயில்களில் செல்லும் மணிப்பூர்வாசிகள் கட்டாயமாக கீழே இறக்கிவிடப்படுவார்கள்” என்று பப்பு யாதவ் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில் பல்வேறு ரயில் நிலையங்களிலும் மணிப்பூர் வாசிகளை அடையாளம் காணும் முயற்சியில் நேற்று பப்பு யாதவ் கட்சியினர் ஈடுபட்டதாகவும் ஆனால் இதில் அவர்கள் தோல்வியுற்றதாகவும் கூறப்படுகிறது. பாட்னாவில் உள்ள ராஜ்பவன் நோக்கி இன்று பேரணி செல்லவும் தனது ஆதரவாளர்களுக்கு பப்பு யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.