சென்னையை சேர்ந்த பேராசிரியர் உதவியுடன் உள்ளூர் மொழிகளில் வழக்கு நிலவரத்தை அறிந்து கொள்ள இணையதளம் அறிமுகம்: உச்ச நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார்

டி.ஒய்.சந்திரசூட்
டி.ஒய்.சந்திரசூட்
Updated on
1 min read

உள்ளூர் மொழிகளிலேயே வழக்கு நிலவரத்தை மக்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக, புதிய இணையதளத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி நேற்று தொடங்கி வைத்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலம் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் பொதுமக்கள் வழக்கு நிலவரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக புதிய இணையதளம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இணையதளத்தில் வழக்கு நிலவரங்களை ஆங்கில மொழியில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதளத்தில் ஆங்கிலம் மட்டுமன்றி, அவரவர் உள்ளூர் மொழிகளிலும் வழக்கு நிலவரங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

நீதிமன்றங்களை பொதுமக்கள் எளிதில் அணுகுவதற்கு ‘இ-கோர்ட்’ முறையை பலப்படுத்தும் நோக்கில், இந்தப் புதிய இணையதளத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிமுகம் செய்து வைத்தார். இதுதொடர்பான விரிவான விவரங்களை அறிய ‘eCommitteesci.gov.in’ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளம் மூலம் ஒருவர் இருந்த இடத்தில் இருந்தே நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்கு நிலவரங்களை மொபைல் போன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் ‘இ-கமிட்டி’ இந்த புதிய இணையதளத்தை வடிவமைத்துள்ளது. மேலும், பார்வையற்றவர்களும் இந்த இணையதளத்தை அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பார்வையற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் நாக்பூரைச் சேர்ந்த ராகுல் பஜாஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ஏழுமலை ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in