

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. அப்போது தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் ஸ்ரீநகரின் குப்காரில் உள்ள வீட்டில் 6 கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஓர் அறிக்கையை வெளியிட்டனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். அதுவரை போராடுவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த 22-ம் தேதி பரூக் அப்துல்லாவின் வீட்டில் 6 கட்சிகளின் தலைவர்களும் மீண்டும் ஒன்றுகூடி, சிறப்பு அந்தஸ்தை மீட்க உறுதியேற்று மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து பரூக் அப்துல்லா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
காஷ்மீருக்குள் ஆயுததாரிகளை அனுப்பக்கூடாது. எங்கள் மாநிலத்தை ரத்தபூமியாக மாற்ற வேண்டாம் என்று பாகிஸ்தானை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். எங்களது உரிமைகளை மீட்க அமைதி வழியில் ஒன்றிணைந்து போராடுவோம். நாங்கள் யாருடைய ஊதுகுழலும் கிடையாது.
எல்லையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையில் ஈடுபடுகின்றன. இருதரப்பு தாக்குதலிலும் எங்கள் மாநில மக்களே உயிரிழக்கின்றனர். மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.