

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு பிறகு கோமா நிலைக்கு சென்றார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வந்தது.
இதனிடையே, அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றதுடன் அவரது சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் அண்மையில் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில்தான் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு ஆகியவை சீராக உள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.