ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எனினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூட்டினார்.

காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு மாநில அரசுகளும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கொண்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர் அல்லது மாணவியருடன் ஒருவர் உடன் வருவதற்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மாணவர்களுடன் அவர்கள் பெற்றோர் அல்லது உடன் வருபவர்களையும் இலவசமாக தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in