

கரோனா வைரஸால் உருவான வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக்க கூட்டணி அரசு அக்கறைகாட்டவில்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி பொதுக்கூட்டம் ஒன்றில் காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸால் கொண்டு வரப்பட்ட லாக்டவுனால் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அவற்றை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு அக்கறையுடன் அணுகத் தவறவிட்டது.
கரோனா காலத்தில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் நாடுமுழுவதும் 1.80 கோடி தொழிலாளர்ளுக்கு ஊதியம் கிடைக்கவில்லை, 8 கோடி கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தார்கள்.
மதிய உணவு பெற்று வந்த 10 கோடி குழந்தைகளுக்கு போதுமான உணவு லாக்டவுன் நேரத்தில் கிடைக்கவில்லை. இவை அனைத்தையும் பிரதமர் மோடி, திட்டமிடப்படாத லாக்டவுனால் வரவழைத்துக்கொண்டார்.
குழந்தைகளின் சத்துணவு வழங்குவதில் 64 சதவீதம் பின்னடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 10 லட்சம் குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி லாக்டவுன் நேரத்தில் வழங்கப்படவில்லைஎன்றும் தெரிய வருகிறது. 6 லட்சம் குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து அளிப்பதும், கரோனா லாக்டவுனால் வழங்கமுடியாமல் போனது. இந்த கரோனா காலத்தில் மதம், சாதி ஆகியவற்றை மறந்து நம் கட்சியினர் அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும்.
இந்திய எல்லைப்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு இருந்தபோதிலும் அதுகுறித்து பிரதமர் மோடி கவலைப்படவில்லை.
பிஹாரில் விரைவில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். கடந்த 2019-ம் ஆண்டு இடைத் தேர்தலில் சிறுபான்மையினர் இருக்கும் கிஷ்ஹான்கஞ் தொகுதியில் வென்று தடம் பதித்துவிட்டோம் என்பதால் தேர்தலில் போட்டியிடுவோம்.
இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.