தற்சார்பு: இந்திய ரக நாய்கள் அருமை; இதையே வளருங்கள்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பரிந்துரை 

தற்சார்பு: இந்திய ரக நாய்கள் அருமை; இதையே வளருங்கள்: மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பரிந்துரை 
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அதில் நம் நாடு வளர்ச்சி தொடர்பான, தேசியம் தொடர்பான பல விஷயங்களை அவர் சுவாரஸ்யமாகத் தெரிவிப்பதுண்டு.

இன்று மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் தற்சார்பு இந்தியா பற்றி பேசிய அவர் இந்திய ரக நாய்கள், போலீஸ், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நாய்கள் குறித்துப் பேசினார்.

மேலும் இந்திய ரக நாய்களின் வகைகளைக் குறிப்பிட்டு அதை கூகுளில் தேடி அதன் நேர்த்தி, குணங்களைக் கண்டால் நமக்கு ஆச்சரியமேற்படும் என்ற பிரதமர் மோடி, இந்திய நாயைத் தேர்வு செய்து வளர்க்க நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மன் கீ பாத் நீண்ட உரையில் இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியது:

இந்தியரக நாய்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரக நாய்களில் Mudhol Houndகள், ஹிமாச்சலில் ஹவுண்டுகள் இருக்கின்றன, இவை மிகவும் அருமையான ரகங்கள். ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற மிக அருமையான இந்திய ரக நாய்கள் உண்டு. இவற்றைப் பராமரிப்பதில் அதிக செலவு பிடிப்பதில்லை, இவை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு இருக்கின்றன.

நமது பாதுகாப்புப் படையினர் இந்த இந்தியரக நாய்களைத் தங்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். கடந்த சில காலமாகவே இராணுவம், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, தேசியப் பாதுகாப்புக் குழு ஆகியோர் முதோல் ஹவுண்ட் ரக நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து, அவற்றை நாய் படைப்பிரிவில் இணைத்திருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர் கோம்பை ரக நாய்களை சேர்த்திருக்கிறார்கள்.

இந்திய விவசாய ஆய்வுக் கழகமும் இந்திய ரக நாய்கள் மீது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்தியரக நாய்களை, மேலும் சிறப்பானவையாக ஆக்குவதும், பயனுள்ளவையாக ஆக்குவதும் தான் இதன் நோக்கம். நீங்கள் இணையதளத்தில் இவை பற்றித் தேடிப் பாருங்கள், இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள், இவற்றின் நேர்த்தி, குணங்கள் ஆகியவற்றைப் பார்த்து உங்களுக்கு ஆச்சரிய உணர்வு மேலிடும். அடுத்தமுறை, நாய் வளர்ப்பு பற்றி நீங்கள் எண்ணமிடும் போது, கண்டிப்பாக இவற்றில் ஏதாவது ஒரு இந்திய ரக நாயை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். தற்சார்பு பாரதம், மக்களின் மனங்களில் மந்திரமாக ஒலிக்கும் போது, எந்த ஒரு துறையும் இதிலிருந்து விடுபட முடியாது.

இவ்வாறு இது தொடர்பாக பேசினார் பிரதமர் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in