Last Updated : 30 Aug, 2020 09:08 AM

 

Published : 30 Aug 2020 09:08 AM
Last Updated : 30 Aug 2020 09:08 AM

குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து சர்ச்சைக் கருத்து: சுதர்ஷன் டிவி நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

மத்திய சிவில் சர்வீஸ் பணிகளில் முஸ்லிம்கள் அதிகஅளவில் சேர்ந்துள்ளார்கள் என்பது குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய சுதர்ஷன் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.

சுதர்ஷன் சேனல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி குறித்த ப்ரமோ வெளியிட்டது. அதில் மத்திய அரசுப் பணிகளில் சமீக காலமாக முஸ்லிம்கள் அதிகரித்துள்ளனர் உள்ளிட்ட பல்ேவறு சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டது.

இந்த கருத்துக்களுக்கு ஐபிஎஸ் அமைப்புகள், ஓய்வு பெற்ற ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள், இன்னாள் மாணவர்கள் சார்பில் சுதர்ஷன் சேனல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்தனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்பைத் தூண்டுவகையிலும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராகவும் இந்த நிகழ்ச்சி இருக்கிறது என மனுவில் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியை ஒளிபரப்புசெய்ய அனுமதித்தால், சமூகத்தில் பெரும் வன்முறையை தூண்டிவிடுவதுபோலாகும், மனுதாரர்களுக்கும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் படித்து சிவில்சர்வீஸ் தேர்வுகளை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். இதுஅரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வாழும் உரிமை, தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது எனத் தெரிவித்தனர்.

சுதர்ஷன் சேனலின் நிர்வாக ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹன்கே

மேலும், அந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சுதர்ஷன் சேனல் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்ய வெள்ளிக்கிழமை தடை விதித்து, சேனலின் நிர்வாக ஆசிரியர் சுரேஷ் சவாங்கே, மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

மேலும், இந்த சுதர்ஷன் சேனல் நிகழ்ச்சி தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் செல்லவே, விளக்கம் கேட்டு சுதர்ஷன் சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் அந்த நிகழ்ச்சிக்கு விதித்த தடையை விலக்கக் கோரி சுதர்ஷன் சேனல் சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று இரவு 7 மணிக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் சாவ்லா முன் அவசரமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி அசோக் சாவ்லா, “ மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அளித்த நோட்டீஸுக்கு நீங்கள் பதில் அளித்தீர்களா” எனக் கேட்டார்.

அதற்கு சேனல் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் இல்லை என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதி அசோக் சாவ்லா “ செப்டம்பர் 1-ம் தேதிக்குள் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் நோட்டீஸுக்கு விளக்கம் அளியுங்கள். அவர்கள் 48 மணிநேரத்துக்குள் முடிவு செய்து எங்களிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன்பின் முடிவு செய்யலாம்.

அந்த நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க முடியாது” எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதற்கிைடயே நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி சுதர்ஷன் சேனல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x