

சீனா, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வான் கண்காணிப்புக்காகவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் ரஃபேல் விமானங்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் வாங்கியுள்ளது. இதன்மூலம் இந்திய விமானப் படையின் பலம் அதிகரித்துள்ளது.
தற்போது, வான்பரப்பில் கண்காணிப்பு திறனை அதிகரிக்கும் விதமாக இஸ்ரேல் தயாரிப்பான பால்கன் ரக கண்காணிப்பு விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. ஏற்கனவே இந்தியாவிடம் 3 பால்கன் விமானங்கள் உள்ளன.
இவற்றில் உள்ள அதிநவீன தொழில்நுட்பமானது, வான்பரப்பில் நுழையும் எதிரி நாட்டு விமானங்களை சில விநாடிகளில் கண்டறிந்து எச்சரிக்கையை அனுப்பும். அதாவது 7 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரிகளின் விமானங்களையும் துல்லியமாக அடையாளம் காணும் திறன் கொண்டது இந்த பால்கன் விமானம். மணிக்கு 973 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது இந்த விமானம்.
தற்போது உலக நாடுகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு விமானங்களில் பால்கன் ரக விமானங்கள்தான் மிகவும் திறன் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த விமானங்களை வாங்கஇஸ்ரேல் அதிகாரிகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதற்கான, 1.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்துக்கு, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.