

கேரளாவில் இன்று 2,397 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
''கேரளாவில் இன்று 2,397 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.
இன்று இந்த மாவட்டத்தில் 408 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதில் 49 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. மேலும், மலப்புரம், கொல்லம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இன்று நோயாளிகளின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டி உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக 379 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 234 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 225 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 198 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 175 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 152 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 139 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 136 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 133 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 95 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 75 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 27 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 21 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனாவுக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 126 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 68 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 2,137 பேருக்கு இன்று நோய் பரவி உள்ளது. இதில் 197 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை. இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 63 பேருக்கு நோய் பரவியுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 2,225 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 48,083 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 23,277 பேர் நோய் பாதித்து சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் தற்போது பல்வேறு பகுதிகளில் 1,95,927 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,76,822 பேர் வீடுகளிலும், 19,105 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 2,363 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 34,988 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிபி நாட், ட்ரூநாட், ஆன்டிஜென் உள்பட இதுவரை மொத்தம் 16,43,633 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள நபர்களிடமிருந்து 1,77,356 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்று நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் பட்டியலில் 15 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருந்து 25 இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது கேரளாவில் 589 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கேரளாவுக்கு இதுவரை 8,69,655 பேர் வந்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து 5,37,000 பேரும், வெளிநாடுகளில் இருந்து 3,32,582 பேரும் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 62 சதவீதம் பேர் சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்துள்ளவர்கள் ஆவர்''.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.