கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சை முடிந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ்: எய்ம்ஸ் தகவல்
கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நலம் பெற்று இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா வைரஸால் கடந்த 2-ம் தேதி பாதிக்கப்பட்டார். குர்கோவன் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்ற அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லேசான உடல் சோர்வும், உடல் வலியும் இருந்ததால் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து நலம் பெற்று அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எய்ஸ்ம் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில், “எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழுமையாகக் குணமடைந்துவிட்டார். அவர் இன்னும் சிறிது நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆவார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
