எதிர்கால அரசியலில் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மையில் இந்தியா முக்கியப் பங்காற்றும்: மத்திய அமைச்சர் பேச்சு
“எதிர்கால உலகளாவிய அரசியல் கட்டமைப்பில் பொருளாதாரம் மற்றும் பேரழிவு இடர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்” என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநாட்டை தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைந்து நடத்தியது.
இந்த மாநாட்டில் நித்யாநந்த் ராய் கூறும்போது “எதிர்கால உலகளாவிய அரசியல் கட்டமைப்பில் பொருளாதாரம் மற்றும் பேரழிவு இடர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.
பேரழிவு இடர் மேலாண்மை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் மிக பிரபலமான 10 அம்சங்கள், குறிப்பாக ஐந்தாவது அம்சம் அதாவது அறிவியல் மற்றும் தொழிநுட்பத்தை வலிமைபடுத்துதல், மற்றும் ஆறாவது அம்சம் - பேரழிவு தொடர்பான பிரச்சினைகளில் பணியாற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை பருவநிலை இடர் மேலாண்மைக்குத் துணை நிற்கும்.
நமது நாட்டில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறமையில் எனக்குப் பெரும் நம்பிக்கை உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நோக்கம் கடைசி மைல்கல்லில் உள்ளவர்கள் வரை செல்வதும், நமது தாய்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை நபர்களையும் சென்றடைய வேண்டியதுமாகும்” என்றார் நித்யானந்த் ராய்.
