

இந்தியாவுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். விளையாட்டு வீரர்களுக்காகவும், விளையாட்டைப் பிரபலப்படுத்தவும் எனது அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது என்று தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தேசிய விளையாட்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்துக் கூறி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
''தேசத்துக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, அளப்பரிய சாதனைகளைச் செய்து பெருமைப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்காக தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. விளையாட்டு வீரர்களின் மன உறுதி மற்றும் தீர்மானம் என்பது மிகச் சிறப்பானது.
ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளைத்தான் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடி வருகிறோம். தயான் சந்த் தனது ஹாக்கி மட்டையால் பல்வேறு மாயஜாலங்களைக் களத்தில் செய்ததை மறக்க முடியாது.
விளையாட்டுகளைப் பிரபலப்படுத்தவும், இந்திய வீரர்களின் திறமையை ஆதரிக்கவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
அதேநேரத்தில், அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் விளையாட்டையும், உடலைக் கட்டுறுதியாக வைக்க உடற்பயிற்சியையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும்
நம் தேசத்தின் மிகச்சிறந்த வீரர்களையும், வீராங்கனைகளையும் உருவாக்க ஆதரவு அளித்த பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கும் இந்த நாள் பொருத்தமானது''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.