Last Updated : 29 Aug, 2020 03:44 PM

 

Published : 29 Aug 2020 03:44 PM
Last Updated : 29 Aug 2020 03:44 PM

44 ஆண்டுகளில் இல்லாத அளவு: ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு: இந்திய வானிலை மையம் தகவல்

கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 25 சதவீதம் கூடுதலாக மழைப் பொழிவு இருந்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழைக் கொடுப்பது தென் மேற்கு பருவமழையாகும். ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி நாடுமுழுவதும் பரவலாக பருவமழையால் மழை கிடைக்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தைவிட 25 சதவீதம் கூடுதலாக மழை கிடைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 17 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவும், ஜூலை மாதத்தில் 10 சதவீதம் பற்றாக்குறை மழையும் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவீதம் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஆகஸ்ட் 28-ம் தேதிவரை நாட்டில் வழக்கமான பெய்யும் மழையைவிட 25 சதவீதம் தென் மேற்கு பருவமழையால் மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இந்த மழைப்பொழிவு அளவு இதற்கு முன் இருந்த அளவைவிட அதிகரித்துள்ளது.

கடைசியாக கடந்த 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 23.8 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு நாட்டில் இருந்தது. அதன்பின் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவீதம் மழை பொழிவு கிடைத்துள்ளது.

ஆனால், 1976-ம் ஆண்டு ஆகஸ்டில் 28.4 சதவீதம் கூடுதல் மழை கிடைத்தது. இந்த அளவை முறியடிக்கவில்லை. இருப்பினும் 44 ஆண்டுகளுக்குப்பின் ஆகஸ்ட் மாதத்தில் கிடைத்த அதிகபட்ச மழை இதுவாகும்.

நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பாகப் பெய்யும் மழையின் அளவைவிட இந்த ஆண்டு ஆகஸ்டில் 9 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது. இதில் பிஹார், ஆந்திரபிரதேசம், தெலங்கானா, தமிழகம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் மழைப் பொழிவு இருந்துள்ளது. இந்த மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் மழை கொட்டித் தீர்த்ததால் வெள்ளம் சூழ்ந்தது.

சிக்கிம் மாநிலத்தில் மிக அதிக அளவு மழை ஆகஸ்டில் பதிவானது. ஆனால், யூனியன் பிரதேசமான ஜம்முகாஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்தில் மழை பற்றாக்குறையாக இருக்கிறது.

நீண்டகால சராசரி அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் 97 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும் என்றும், பருவமழையின் 2-வது பாதியில் 104 சதவீதம் மழைப் பொழிவு நாட்டில் இருக்கும் ”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை நீண்டகால சராசரியில் இயல்பான மழை அளவு என்று குறிப்பிடப்படுகிறது.

மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்களில் கடந்த 27-ம் தேதி நிலவரப்படி, கடந்த ஆண்டு இருந்த நிலையைவிட, நீர் கொள்அளவு அதிகரித்து சிறப்பான நிலையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகள் சராசரி நீர்தேக்க அளவைவிட, இந்த ஆண்டு சிறப்பாக இருக்கிறது.

கங்கை நதி, நர்மதா, தப்தி, மகி,சபர்மதி நதிகள், குட்ச், கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, காவிரி மற்றும் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலும் நீர் வரத்து இயல்பை விட அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x