Last Updated : 29 Aug, 2020 01:30 PM

 

Published : 29 Aug 2020 01:30 PM
Last Updated : 29 Aug 2020 01:30 PM

கரோனா கால சிரமங்கள்: கடன் தவணை செலுத்தும் காலத்தை  31-ம் தேதிக்குப்பின் ரிசர்வ் வங்கி நீட்டிக்க வாய்ப்பில்லை

கோப்புப்படம்

மும்பை

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருதித்தில் கொண்டு கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து அவகாசம் அளிப்பது என்பது, கடன் பெறுபவர்கள் நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்தும், முதலீட்டாளர்களின் நலனை பாதிக்கும் என்பதால் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தொழில்முடக்கம், நிறுவனங்கள் மூடல் போன்றவற்றால் வருமானமில்லாமல் மக்கள் இருப்தால் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணை செலுத்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி அறிவித்தது.

கரோனா லாக்டவுனால் தொழில், வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், கடன் தவணையைச் செலுத்துவதில் வர்த்தகர்களுக்கும், தொழில்நடத்துவோருக்கும் சிரமம் ஏற்படும் என்பதால் இந்த அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அளித்திருந்த கடன்தவணை செலுத்தும் கால அவகாசம் வரும் 31-ம்தேதியுடன் முடிகிறது. அடுத்த மாதமும் கடன் தவணை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கான வாய்ப்பில்லை, அவகாசம் நீட்டிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகையில் “ கரோனா காலத்தில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் தொழில்முடக்கம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வர்த்தகம் பாதிப்பு போன்றவை ஏற்பட்டதால், கடன் தவணைசெலுத்துவதில் அவகாசம் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய 6 மாத அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது.

ஆனால், தொடர்ந்து அவகாசம் அளிப்பதால், கடன் பெறுபவர்களின் நடத்தையும் பாதிக்கப்படும், கடன் கொடுத்த தொகையும் வாராக்கடனில் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டாளர்களுக்கு வட்டி அளிக்க வேண்டும், அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது.

நீண்டகாலத்தில் கடன் தவணை செலுத்த அவகாசம் அளிப்பது வங்கியின் நிதி நிலைத்தன்மையையும் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது. ஆதலால், கடன் தவணை செலுத்தும் காலம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை” எனத் தெரிவி்க்கின்றன.

இது தவிர ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் தீபக் பரேக், கோடக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோடக் ஆகியோர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு சமீபத்தில் விடுத்த கோரிக்கையில், கடன் தவணை செலுத்தும் காலத்தை மேலும் நீட்டிக்ககூடாது, அது வங்கியின் நிதி நிலைத்தன்மையை பாதிக்கும்.

கடன் பெற்ற பலரும் இந்த திட்டத்தை பயன்படுத்தி கடன் தவணையை முறையாகச் செலுத்துவதில்லை. முதலீட்டாளர்களின் நலன் காப்பது அவசியம்” எனத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x