கரோனா பரவல் கடவுளின் செயலா?- நிதி அமைச்சர் கருத்துக்கு சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

கரோனா பரவல் கடவுளின் செயலா?- நிதி அமைச்சர் கருத்துக்கு சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்
Updated on
1 min read

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், கரோனா பரவல் கடவுளின் செயல் என்று குறிப்பிட்டார். இது நாட்டின் பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வாகிவிட்டது. இந்த ஆண்டு மிகவும் அசாதாரண சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டை தற்போதைய சூழலில் அளிக்க முடியாது. இதை நிவர்த்தி செய்ய மாநிலங்களுக்கு 2 வாய்ப்புகள் தரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இப்போது கரோனா நடவடிக்கை கடவுளின் செயல் என்றும் இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்தது என்றும் கூறினால், கரோனா காலத்துக்கு முன்பு நாட்டின் ஜிடிபி குறைந்தது ஏன் என்று சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி வெளியி்ட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 கடவுளின் செயல் என்று மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டதாக எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விரைவிலேயே வீடியோ வெளியிட உள்ளேன். ஜிடிபி சரிவானது 2015-ம் ஆண்டில் இருந்தே நிகழ்ந்துள்ளது. 2015-ல் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது. 2020-ம் ஆண்டு முதல் காலாண்டில் இது 3.1 சதவீதமாக சரிந்துள்ளது. இது கரோனா பரவலுக்கு முந்தைய நிலவரமாகும். இதுவும் கடவுளின் செயலா?

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக 2 வாய்ப்புகள் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டிக்கு ரூ.97,000 கோடியை கடனாக பெறலாம். இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரி வசூல் அதிகரிக்கும் போது திரும்ப செலுத்தலாம். அல்லது மாநில அரசுகளே இந்த ஆண்டு ஏற்படும் ஜிஎஸ்டி பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியை ஏற்றுக் கொள்வது என்பதாகும். இதை மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி முடிவெடுக்கலாம்.

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in