

ஆயுள் காப்பீடு பெற்றால் அவர்கள் விரைவில் மரணமடையப் போகிறார்கள் என அர்த்தமா என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எனினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூட்டினார்.
காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீட் தேர்வு குறித்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளதாவது:
லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு நுழைவுச் சீட்டை டவுண்லோடு செய்துள்ளதாக மத்திய அரசு வாதம் செய்கிறது. இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. யாராவது ஆயுள் காப்பீடு பெற்றால் அவர்கள் விரைவில் மரணமடையப் போகிறார்கள் என அர்த்தமா? மத்திய அரசு ஏன் விடாப்பிடியாக இருக்கிறது என்று தெரியவில்லை.’’ எனக் கூறினார்.