

ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையில் ஆளில்லா போர் விமானங்களை இஸ்ரேல் நாட்டில் இருந்து வாங்கும் திட்டத்தை இந்தியா துரிதப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்நாடு கூறிய சில வாரங்களில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் இருந்து இத்தகைய விமானங்களை வாங்கும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன் உதயமானது. என்றாலும் இத்திட்டம் தாமதாகி வந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இஸ்டஸ்ட்ரீஸ் (ஏஏஐ)’ என்ற நிறுவனத்திடம் இருந்து, ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையிலான ‘ஹெரோன் டி.பி.’ என்ற 10 ஆளில்லா போர் விமானங்களை வாங்கும்படி மத்திய அரசுக்கு விமானப் படை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கு மத்திய அரசு இம்மாதம் ஒப்புதல் அளித்துள்ளதாக விமானப் படை அதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பாக ரூ.2,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விமானம் 2016 இறுதியில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் என்றும் இதனால் விமானப் படையின் போர்த் திறன் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களை தடுக்கும் முயற்சியிலும் இந்த விமானங்களை இந்தியா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.