

மும்பையில் இம்மாதம் 17-ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அதேநேரத்தில், அன்றைய தினத்தில் விலங்குகள் கொல்லப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயின் சமூகத்தினரின் 'பர்யூஷன்' விரத காலத்தை முன்னிட்டு மும்பை மாநகராட்சி பிறப்பித்த இத்தடை உத்தரவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தத் தடைக்கு எதிராக பாம்பே மட்டன் டீலர்கள் சங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனூப் வி.மோதா, அஜ்மத் சையது ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "அரசின் உத்தரவு நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஒரு பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடியது" என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். ஆனால், அந்நாளில் விலங்குகளை கொல்வதற்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் இறைச்சிக் கூடங்களை மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
மும்பையை ஒட்டியுள்ள தானே மாவட்டத்தைச் சேர்ந்த நவி மும்பை, மிரா-பயந்தர் நகராட்சிகளிலும் இதேபோன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிருந்து எவரும் தடைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகவில்லை. எனவே இந்த நகராட்சிகளுக்கு தங்கள் உத்தரவு பொருந்தாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
மேலும் நீதிபதிகள், "ஜெயின் சமூகத்தினரின் 'பர்யூஷன்' விரதத்துக்காக அகிம்சையை வலியுறுத்தும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என கூறுபவர்கள் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும். மீன், முட்டை அசைவம் இல்லையா? இத்தடை கிளப்பியுள்ள அரசியல் சர்ச்சையானது மக்களின் உணவு பழக்கவழக்கங்களை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது" என்றனர்.
மேலும் 2004-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அரசு ஜெயின் திருவிழாவை ஒட்டி இறைச்சி விற்பனைக்கு இரண்டு நாட்களுக்குத் தடை விதித்திருந்தாலும், அது தீவிரமாக கடைபிடிக்கப்படவில்லை" என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
முன்னதாக இந்த வழக்கு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "செப்டம்பர் 10, 13, 17, 18 ஆகிய நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் 13, 18 ஆகிய தேதிகளில் தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது. ஆனால் மற்ற இரு நாட்களில் இத்தடை அமலில் இருக்கும்" என மும்பை மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.