பிரதமர் ஜன்-தன் திட்டத்தின் கீழ் 8 கோடி பேர் அரசின் நேரடி நலத்திட்டங்களில் பயன்பெறுகிறார்கள்: 6 ஆண்டு நிறைவையொட்டி மத்திய அரசு தகவல்
நிதி உள்ளிணைத்தலுக்கான தேசிய இயக்கமான பிரதமரின் ஜன்-தன் திட்டம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து பிரதமர் மோடி, வறுமை ஒழிப்பின் அடித்தளம் ஜன் தன் திட்டம் என்று பெருமிதத்துடன் ட்வீட்ட் செய்துள்ளார்.
இந்நிலையில் ஜன்-தன் திட்டத்தின் வெற்றி குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நிதி உள்ளிணைத்தலுக்கான தேசிய இயக்கமான பிரதமரின் ஜன்-தன் திட்டம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளை நிறைவு செய்தது
40.35 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமரின் ஜன்-தன் திட்டம் தொடங்கியது முதல் மொத்தம் ரூ 1.31 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன
பிரதமரின் ஜன்-தன் திட்ட கிராமப்புற வங்கிக் கணக்குகள் 63.6 சதவீதம்; பிரதமரின் ஜன்-தன் திட்ட மகளிர் வங்கிக் கணக்குகள் - 55.2 சதவீதம்
பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், ஏப்ரல் - ஜூன் 2020 காலத்தில் பிரதமரின் ஜன் தன் திட்ட மகளிர் வங்கிக் கணக்குதாரர்களின் கணக்குகளில் மொத்தம் ரூ 30,705 கோடி செலுத்தப்பட்டது.
அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 8 கோடி பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குதாரர்கள் நேரடிப் பலன் பரிவர்த்தனையைப் பெறுகிறார்கள்
விளிம்புநிலை மக்களுக்கும், இதுவரை சமூக-பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்கும் நிதி உள்ளிணைத்தலை வழங்க நிதி அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதால், அரசின் தேசிய முன்னுரிமையாக நிதி உள்ளிணைத்தல் விளங்குகிறது. ஏழைகள் தங்களது சேமிப்புகளை முறையான நிதி அமைப்புக்குள் கொண்டு வர வழி வகுப்பதாலும், கிராமங்களில் உள்ள தங்களது குடும்பங்களுக்குப் பணத்தை அனுப்ப வசதி அளிப்பதாலும், அதிக வட்டிக்குக் கடன் தருபவர்களிடம் இருந்து அவர்களுக்கு விடுதலை அளிப்பதாலும், இது முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தின் மிகப்பெரிய நிதி உள்ளிணைத்தல் முயற்சிகளில் ஒன்றான பிரதமரின் ஜன்-தன் திட்டம் (மக்கள் நிதித் திட்டம்) இந்த உறுதியை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
பிரதமர் நரேந்திர மோடியால் 15 ஆகஸ்ட், 2014 அன்று சுதந்திர தின உரையில் பிரதமரின் ஜன்-தன் திட்டம் அறிவிக்கப்பட்டது. 28 ஆகஸ்ட் அன்று திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், தீங்கான சுழலில் இருந்து ஏழைகள் விடுவிக்கப்படுவதைக் கொண்டாடும் திருவிழா என்று அந்த நிகழ்வை வர்ணித்தார்.
பிரதமரின் ஜன்-தன் திட்டம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "மோடி அரசின் மக்கள்-சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடிக்கல்லாக பிரதமரின் ஜன்-தன் திட்டம் இருந்துள்ளது. நேரடிப் பலன் பரிவர்த்தனையாக இருக்கட்டும், கோவிட்-19 நிதியுதவியாக இருக்கட்டும், பிரதமரின் விவசாயிகள் திட்டமாக இருக்கட்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டமாக இருக்கட்டும், ஆயுள் அல்லது சுகாதாரக் காப்பீடாக இருக்கட்டும், இவற்றைச் செயல்படுத்துவதற்கான முதல் அடியான வங்கிக் கணக்கை பிரதமரின் ஜன்-தன் திட்டம் கிட்டத்தட்ட நிறைவு செய்துள்ளது," என்று அவர் கூறினார்.
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் அனுராக் தாகூரும் பிரதமரின் ஜன்-தன் திட்டம் குறித்த தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்."பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வங்கிச் சேவைகள் சென்றடையாதவர்களை பிரதமரின் ஜன்-தன் திட்டம் வங்கி அமைப்புக்குள் கொண்டு வந்துள்ளது, இந்தியாவின் நிதிக் கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது, மற்றும் 40 கோடிக்கும் அதிகமான வங்கிக்கணக்குதாரர்களை நிதி உள் இணைத்தலுக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் பெரும்பான்மையான பயனாளிகள் பெண்கள் ஆவார்கள், பெருவாரியான கணக்குகள் கிராமப்புற இந்தியாவில் இருந்து தொடங்கப்பட்டுள்ளன. இன்றைய கோவிட்-19 காலத்தில், சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு நேரடிப் பலன் பரிவர்த்தனை முறை எவ்வாறு துரிதமாகவும், எளிதாகவும் அதிகாரமளித்து, நிதிப் பாதுகாப்பை வழங்கியது என்பதை நாம் கண்டோம். பிரதமரின் ஜன்-தன் திட்டம் மூலமாக நடைபெற்ற நேரடிப் பலன் பரிவர்த்தனை, ஒவ்வொரு ரூபாயும் அது சென்றடைய வேண்டிய பயனாளியை அடைவதை உறுதி செய்து, அமைப்பு ரீதியான கசிவுகளைத் தடுத்தது இதன் முக்கிய அம்சமாகும்."
