Published : 28 Aug 2020 08:08 AM
Last Updated : 28 Aug 2020 08:08 AM

ஆந்திராவுக்கு 3 தலைநகரம் அமைக்கும் திட்டம்; உயர் நீதிமன்ற இடைக்கால தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆந்திர மாநிலத்திற்கு அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்க ஜெகன்மோகன் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநிலபேரவையில் நிறைவேற்றப்பட்ட2 மசோதாக்களுக்கு ஆளுநர்விஸ்வ பூஷண் ஹரிசந்தன் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இந்த சட்டங்களுக்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் இந்த சட்டங்களுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும் மனுவுக்கு விளக்கம் அளிக்கும்படி உத்தர விட்டது. ஆனால் உயர் நீதிமன்ற தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை ஜெகன்மோகன் அரசு அணுகியது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர். “இடைக்கால தடை குறித்து உயர் நீதிமன்றத்திலேயே விளக்கம் அளித்து வழக்கை முடிக்கப் பாருங்கள்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் முந்தைய ஆட்சியில் அமராவதியை தலைநகராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. விஜயவாடா – குண்டூர் இடையே இதற்கு சுமார் 34 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயிகள் வழங்கினர். இந்நிலையில் ஜெகன்மோகன் அரசின்முடிவுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளும் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரும் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். .

இதனிடையே, இவ்வழக்கு வரும் செப்டம்பர் 21-ம் தேதிக்குஆந்திர உயர் நீதி மன்றம் தள்ளிவைத்தது. மேலும், இது குறித்துசெப்டம்பர் 11-ம் தேதிக்குள்பதில் அளிக்க ஆந்திர அரசுக்கு அவகாசம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x