Last Updated : 28 Aug, 2020 06:56 AM

 

Published : 28 Aug 2020 06:56 AM
Last Updated : 28 Aug 2020 06:56 AM

கர்நாடக மாநிலத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை பாஜக.வுக்கு அழைத்து வந்த ‘அமைதிப் படை’ சந்தோஷ்: தென் மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த மேலிடத் தலைவர்கள் வியூகம்

கர்நாடக காவல் துறையின் 'சிங்கம்' என்று அதிரடி அதிகாரியாக அறியப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜக.வில் இணைந்தது தமிழகத்தை கடந்து, கர்நாடகாவிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இவரது வருகையை கர்நாடக அமைச்சர்கள் சுதாகர், சி.டி.ரவி, அசோகா, பாஜக எம்.பி.க்கள் ஷோபா கரந்தலாஜே, பிரதாப் சிம்ஹா, தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள அண்ணாமலை பாஜக.வில் சேர்ந்திருப்பதால் தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். கர்நாடகாவிலும் அவரைப் பின்பற்றி துடிப்பான இளைஞர்கள் பாஜக.வில் சேர்வார்கள் என
குறிப்பிட்டுள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் விதமாக அண்ணாமலையும் கன்னடத்திலேயே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர் பட்டாளம்

கடந்த 2011 ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான அண்ணாமலை க‌ர்நாடகாவில் உடுப்பி, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அந்த காலக் கட்டத்தில் அங்கு ஏற்பட்ட மதரீதியான பிரச்சினைகளையும், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளையும் துணிச்சலாக கையாண்டதால் 'சிங்கம் போலீஸ்' என்று அழைக்கப்பட்டார். பள்ளி, கல்லூரிகளின் விழாக்களில் பங்கேற்று தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உரையாற்றியதால் சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது.

இதை கவனித்த மடாதிபதிகள் உடுப்பி, சிக்கமகளூரு, மங்களூரு பகுதிகளில் உள்ள தங்களது கல்வி நிலையங்களில் பேச அண்ணாமலையை அடிக்கடி அழைத்தனர். அந்த கூட்டங்களுக்கு சென்று வந்ததன் மூலம் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட‌ அமைப்பினருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாக பாஜக.வின் தற்போதைய தேசிய செயலாளரும், ஆர்எஸ்எஸ்
அமைப்பின் முக்கிய நிர்வாகியுமான பி.எல்.சந்தோஷின் அறிமுகம் கிடைத்ததாக தெரிகிற‌து.

யார் இந்த சந்தோஷ்?

கர்நாடக ஆர்எஸ்எஸ் வட்டார‌த்தில் விசாரித்த போது, 'முதலில் பி.எல்.சந்தோஷ் என்றால் 100 சதவீத அர்ப்பணிப்புமிக்க காரிய கர்த்தர். அமைப்பு ரீதியாக கள செயல்பாட்டாளர். திருமணமே செய்து கொள்ளாமல், ஆர்எஸ்எஸ் அமைப்புக்காக தன்னை முழுமை
யாக அர்ப்பணித்து கொண்டவர். ஷிமோகாவை சேர்ந்த சந்தோஷ், கல்லூரி காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தார். 10 ஆண்டு
கள் தாவணகெரேவில் தங்கியிருந்து ஆர்எஸ்எஸ் பணிகளில் ஈடுபட்டார்.

எந்த பொது கூட்டங்களிலும் தலைமை தாங்கி மேடை மீது அமர்ந்து பேச மாட்டார். ஊடகங்களிலும், பதவியில் இருப்பவர்கள் மத்தியிலும் தலைக்காட்ட மாட்டார். களத்தில் மக்களோடு மக்களாக இருந்து, கீழ் மட்டத்தில் இருந்து அமைப்பை கட்டுவார்.
அதிகபட்சம் சமூக வலைதளங்களில் சூடாக கருத்துக்களை பதிவிடுவார். இவரது கருத்தை பின்பற்றியே பாஜக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தங்கள் நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

கடந்த 2006-ல் கர்நாடக பாஜக.வின் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். கடலோர கர்நாடகா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் பல்வேறு கிளை அமைப்புகளை உருவாக்கி, கட்சியை வாக்குச்சாவடி அளவுக்கு கொண்டு சென்றார்.

பெரு நகரங்களில் தொடங்கி சிறு கிராமங்கள் வரை தகுதியான நிர்வாகிகளை நியமித்து, அந்த பகுதிகளை பாஜக.வின் கோட்டையாக மாற்றினார். இதனாலேயே மறைந்த முன்னாள் அமைச்சர் அனந்த்குமார் பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதியில் பாஜக தொடர்ந்து ஜெயிப்பதற்கு பி.எல்.சந்தோஷ் காரணம் என பாஜக மேலிட தலைவர்களிடம் எடுத்துரைத்தார் எனத் தெரிய வந்தது.

தலைவர்களுடன் நெருக்கம்

ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்த பி.எல்.சந்தோஷ், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும் நெருக்கமாக மாறினார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலின் போது தென் மாநிலங்களுக்கான தேர்தல்
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதில் சரியாக பணியாற்றியதால் பாஜக.வின் வியூகம் அமைக்கும் குழுவில் இடம் கிடைத்தது. மேலும் 2019-ல் பாஜக தேசிய செயலாளர் பதவியும் வழங்கப்பட்ட‌து.

கர்நாடகாவின் மோடி

பி.எல்.சந்தோஷ் தேசிய தலைவர்களுக்கு நெருக்கமாக இருப்பது கர்நாடகாவில் எடியூரப்பா, ஈஸ்வரப்பா போன்ற தலைவர்களுக்கு நெருக்கடியாக மாறியது. அவரை கட்சியை விட்டு வெளியேற்ற எடியூரப்பா போன்றவர்கள் தீவிரமாக முயற்சித்த போதும், அது நடக்கவில்லை. கடந்த 2019-ல் க‌ர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத‍, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி வந்த போது அமித் ஷா, 'ஆபரேஷன் தாமரையை' கச்சிதமாக முடிக்குமாறு சந்தோஷுக்கு உத்தரவிட்டார். கொடுத்த காரியத்தை சத்தமில்லாமல் கச்சிதமாக முடித்ததால் அவரை ‘அமைதி படை’ சந்தோஷ் என்று பாஜக மேலிட தலைவர்களே அழைக்கிறார்கள்.

மீண்டும் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தாலும், 3 துணை முதல்வர் என்ற திட்டத்தை சந்தோஷ் முன்மொழிந்தார். அதற்கு எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்த போதும், பாஜக மேலிடம் சந்தோஷின் பேச்சுக்கே செவிசாய்த்தது. இதனாலே அஷ்வத் நாராயணா போன்ற இளம் தலைவர்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. இதன் பிறகே பாஜக.வினர் சந்தோஷை, 'கர்நாடக மோடி' என்று அழைக்க தொடங்கினர்.

சந்தோஷை பொறுத்தவரை ஆற்றல் மிக்க இளைஞர்களையும், சமூகத்தில் நற்பெயரை கொண்டுள்ள பிரபலங்களையும் பாஜக.வுக்கு அழைத்துவர வேண்டும். அதன் மூலமாகவே தென்னிந்தியா முழுவதும் பாஜக ஆட்சியை பிடிக்க முடியும் என உறுதியாக நம்புகிறார். இதனால் கட்சிக்குள் இருக்கும் மூத்த தலைவர்களிடம் விலகி இருக்கும் சந்தோஷ், இளையவர்களிடம் நெருக்கம் காட்டுவார்.

இளைஞர்களுக்கு வழிகாட்டி

சந்தோஷ் அழைத்து வந்தவர்தான் தற்போதைய மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா. ஆர்எஸ்எஸ் துடிப்பாக இருந்த பிரதாப் சிம்ஹாவை சரியாக அடையாளம் கண்டு, பாஜக.வுக்கு அழைத்து வந்தார். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவருக்கு தேர்தலில் வாய்ப்பு வாங்கி கொடுத்து, காங்கிரஸின் கோட்டையாக இருந்த மைசூருவை கைப்பற்றவும் வியூகம் அமைத்து கொடுத்தார்.

இதே போல பெங்களூரு தெற்கு தொகுதியில் அனந்த்குமாரின் மறைவுக்கு பின் அவரது மனைவி தேஜஸ்வினியை களமிறக்க வேண்டும் என எடியூரப்பா போன்ற மூத்த தலைவர்கள் விரும்பினர். ஆனால் தேஜஸ்வி சூர்யா என்ற இளைஞருக்குதான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சந்தோஷ் உறுதியாக கூறினார். அதனை ஏற்று தேஜஸ்வி சூர்யாவுக்கு மோடி வாய்ப்பளிக்க, அவர் இளம் எம்.பி.யாக தேர்வானார்.

தேசப்பற்று

கடந்த 2018-ல் பெங்களூரு தெற்கு மண்டல உதவி ஆணையராக அண்ணாமலை பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயத்தில் பி.எல்.சந்தோஷுக்கும் அண்ணாமலைக்கும் நல்ல நட்பு உருவானது. அதன் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியல், தேசப்பற்று குறித்த பார்வை, இளைஞர்களை மையமாக கொண்ட எதிர்கால இந்தியா, தமிழகத்தில் உருவாகியிருந்த தலைமைக்கான வெற்றிடம் ஆகியவற்றை குறித்து பேசினார். இதில் மனமாற்றம் அடைந்ததாலேயே அண்ணாமலை தன் பணியை ராஜினாமா செய்தார்.

இதன் பின் அண்ணாமலை, சந்தோஷின் வழிகாட்டுதலின்படி டெல்லி சென்று, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல்துறை நிபுணர்களிடம் பயிற்சி பெற்றார். தமிழக தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக பாஜக.வில் இணைந்துள்ளார். அண்ணாமலையை வைத்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது சந்தோஷின் திட்டம் என சொல்ல முடியாது. ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு அண்ணாமலை உதவியாக இருப்பார் என சந்தோஷ் நம்புகிறார் என்றனர்.

எதிர்பாராதது நடக்கும்

பி.எல்.சந்தோஷிடம் இந்து தமிழ் நாளிதழ் சார்பில் கேட்ட போது, ''அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி என்பதையெல்லாம் விடுங்கள். அவர் ஒரு தீவிரமான உழைப்பாளி. எடுத்த வேலையை சிறப்பாக செய்யக் கூடிய தேர்ந்த பணியாளர். அவரைப் போன்றவர்கள் பாஜக.வில் இணைந்தால் கட்சி நிச்சயம் வளரும். அண்ணாமலையை தொடர்ந்து நிறைய பேர் தமிழகத்தில் பாஜக.வில் இணைவார்கள். யாரும் எதிர்பார்க்காத மாற்றம் நடக்கும்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x