Published : 27 Aug 2020 06:31 PM
Last Updated : 27 Aug 2020 06:31 PM

தொழில் தொடங்கும் எண்ணத்தை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

வரக்கூடிய காலங்களில் இந்தியாவை `தற்சார்பு கொண்டதாக' ஆக்குவதற்கு இளைஞர்களிடம் தொழில் தொடங்கும் உத்வேகத்தை ஏற்படுத்தி வளர்க்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

ஒவ்வொரு குடிமக்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் தொழில்முனைவு திறமையைக் கண்டறிந்து, உள்ளூர் வளங்களைக் கொண்டு உற்பத்திகள் செய்து தற்சார்பு நிலையை எட்டவும், மனிதகுலத்துக்கு சேவை ஆற்றவும் வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சமூக மேம்பாடு மற்றும் பூதான் இயக்கம் என்ற மகாத்மா காந்தியின் தத்துவங்களைப் பரப்புவதில் ஆச்சார்ய வினோபா பாவே பங்களிப்பு குறித்த இணையவழிப் பயிலரங்கில் பேசிய போது குடியரசு துணைத் தலைவர் இந்த விஷயங்களை வலியுறுத்தினார்.

வினோபா மற்றும் காந்தி ஆகியோர் கொண்டிருந்த லட்சிய நோக்கமான சஷாக்த் பாரதம், ஸ்வாபிமானி பாரதம், தற்சார்பு பாரதம் என்ற இலக்குகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்தியாவின் தற்சார்பு என்ற திட்டம் தேசியவாதம் மற்றும் தனித்து செயல்படுதல் என்பதாக இல்லாமல், உலக அளவிலான நன்மைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்வதாகவும் இருக்கும் என்று விளக்கினார்.

மகாத்மா காந்தியின் சிந்தனைகள் காலத்தைக் கடந்து நிற்பவையாக உள்ளன என்று கூறிய திரு. நாயுடு, எப்போதும் புதிய விஷயங்களை சோதித்துப் பார்ப்பதில் நாட்டம் கொண்டவராக மகாத்மா காந்தி இருந்த காரணத்தால் இன்றைய காலகட்டத்திலும் அவர் வழிகாட்டியாக இருக்கிறார் என்று கூறினார்.

பூனா ஒப்பந்தத்தின் கோட்பாடுகளை நிறைவேற்றுவதில் உறுதி கொண்டிருந்த காரணத்தால், மகாத்மா காந்தி 1932ல் ஹரிஜன சேவாக் சங்கத்தைத் தொடங்கியதைக் குறிப்பிட்ட அவர், காந்தியடிகளைப் பொருத்த வரையில் ஒடுக்கப்பட்ட மக்களை கை தூக்கி விடுவதற்கான நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்குவதாக பூனா ஒப்பந்தம் இருந்தது என்று கூறினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், கண்ணியமும் கிடைக்கச் செய்வதற்கான உறுதியை அளிப்பதாகவும் பூனா ஒப்பந்தத்தை காந்தியடிகள் கருதினார் என்றார் அவர்.

நம்முடைய சுதந்திரப் போராட்டம், வெறுமனே அரசியல் இயக்கமாக மட்டுமின்றி, நாட்டின் மீட்சி மற்றும் சமூக கலாச்சார விழிப்பைப் பெறுவதற்கான முயற்சியாகவும் இருந்தது என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார். மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வது தான் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது.

காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார் என்று அவர் குறிப்பிட்டார். தங்கள் கலாச்சாரம், மொழியில் இந்திய மக்கள் பெருமை கொண்டு, மறைந்திருக்கும் பலங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் என காந்தி விரும்பியதாக நாயுடு கூறினார்.

காந்தியடிகளின் எண்ணங்களை அப்படியே பின்பற்றிய சீடராக ஆச்சார்ய வினோபா பாவே இருந்தார் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், அக்கறை காட்டுதல், தியாகம் மற்றும் சேவை என்ற விஷயங்கள் தான் இந்தியன் என்பதன் முக்கியமான அம்சங்களாக உள்ளன என்று குறிப்பிட்டார்.

ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்கம் பற்றிப் பேசிய குடியரசு துணைத் தலைவர், கட்டாயப்படுத்தாமல், வன்முறை ஏதும் இல்லாமல் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் வினோபா என்று கூறினார். மக்களின் தீவிரமான பங்கேற்பு இருந்தால் ஆக்கபூர்வமான, நீடித்து நிலைக்கும் மாற்றங்களை உருவாக்க முடியும் என வினோபா பாவே நிரூபித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

14 ஆண்டு காலத்தில் வினோபா பாவே சுமார் 70 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று, நிலமற்ற விவசாயிகளுக்கு 42 லட்சம் ஏக்கர் நிலங்களை வழங்கியதாக அவர் தெரிவித்தார். வினோபா பாவே அழைப்பை ஏற்று போச்சம்பள்ளியைச் சேர்ந்த வேதிரே ராமச்சந்திர ரெட்டி தான் முதன்முதலில் தனது 100 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தார் என்றும் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார்.

கிராமப்புற மறுசீரமைப்பு மற்றும் ஊரக மேம்பாடு என்ற காந்தியின் சிந்தனைகளை நிறைவேற்றும் வகையில் வினோபா உருவாக்கிய சர்வோதயா இயக்கம், கிராம்தான் கோட்பாடு ஆகியவை பற்றியும் குடியரசு துணைத் தலைவர் பேசினார்.

மனிதர்களின் நல்லெண்ணங்கள் மீதான நம்பகத்தன்மை, சமூகத்தில் பின்தங்கிய மக்களின் நன்மைக்காக பணவசதி மிகுந்தவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை ஆகியவை தான் இந்த முன்முயற்சிகளுக்கு அடிப்படையாக இருந்தன என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x