Last Updated : 27 Aug, 2020 05:32 PM

 

Published : 27 Aug 2020 05:32 PM
Last Updated : 27 Aug 2020 05:32 PM

மாநிலங்களின் வருவாய் இழப்புக்கு மத்திய அரசுதான் இழப்பீடு வழங்க வேண்டும்: வலுவான கோரிக்கையில் மேற்கு வங்கத்துடன் இணைந்த கேரளா, பஞ்சாப், டெல்லி மாநிலங்கள்

மாநிலங்களின் வருவாய் வீழ்ச்சிக்கு இழப்பீடு அளிக்கும் மிக முக்கியமான விவாதம் வியாழனன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடைபெற்றது.

வருவாய் இழப்பை ஈடுகட்ட கடன் வாங்க அறிவுறுத்தும் மத்திய அரசை எதிர்த்து பாஜக தலைமை அல்லாத மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் 41வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில பிரதிநிதிகளுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டப்பட்டது. இதில் முக்கியமாக மாநிலங்களின் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்டுவது குறித்து விவாதங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இல்லாத மாநில கட்சிகள் மாநிலங்களின் வருவாய்க் குறைப்பாட்டை மத்திய அரசு ஈடுகட்டும் சட்டக்கடமை உள்ளது என்று அறிவுறுத்தினர், ஆனால் வரிவருவாயில் பற்றாக்குறை இருக்கும்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்ற கடப்பாடு இல்லை என்று சட்டரீதியான ஒரு கருத்தைச் சுட்டிக்காட்டியது மத்திய அரசு.

அதாவது மத்திய அரசும், பாஜக-ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி செய்யும் பிஹார் ஆகியவை கோவிட்-19-னால் வீழ்ந்த வரிவருவாயை கடன் மூலம் மாநிலங்கள் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு இருப்பதாக கூட்டத்திற்கு நெருங்கிய வட்டாரங்கல் பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளன. சந்தையிலிருந்தி திரட்டுதல், செஸ் வரியை அதிகப்படுத்துதல் போன்ற தெரிவுகள் முன்வைக்கப்பட்டதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில அரசுகளின் குரலாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா ஆகஸ்ட் 26 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் மாநில வருவாய் இழப்புகளுக்கு சந்தையிலிருந்து திரட்டுதல் என்பதை தெரிவாக முன் வைக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

“மத்திய அரசு தாங்கள் வசூலிக்கும் பலதரப்பட்ட செஸ் வரிகளிலிருந்து மாநில வருவாய் இழப்புக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். வருவாய் குறைபாடு இருக்கும் போது அதை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும் என்ற பொறுப்ப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இதுதா மாநிலங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்த அடிப்படையாகும்” என்று அமித் மித்ரா தன் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

2017-ல், மிகப்பெரிய வரி சீர்த்திருத்தம் என்று கூறப்பட்ட ஜிஎஸ்டி திட்டத்துக்காக வாட் வரி போன்ற உள் வரிகளை தேச அளவிலான ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர 28 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்தன. அப்போது மாநிலங்களின் வருவாயில் குறைபாடு, சரிவு ஏற்பட்டால் மத்திய அரசு இழப்பீடு தரும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதாவது ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் மீது ஜிஎஸ்டிக்கும் கூடுதலாக விதிக்கப்படும் செஸ் வரி மூலம் தொகை உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் கரோனா பெருந்தொற்று பீடிப்பதற்கு முன்னமேயே இழப்பீடு செஸ் வரி உட்பட ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. அதனால் மத்திய அரசினால் மாநில அரசின் வருவாய் இழப்பை ஈடுகட்ட முடியவில்லை. ஜிஎஸ்டி வரவுகளில் மாநிலங்களுக்கு பாதி வந்து சேர வேண்டும்.

ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் வரி இலக்குகளை எட்டாமல் போயிருக்கலாம், ஆனால் பெட்ரொல், டீசல் உள்ளிட்ட ஜிஎஸ்டி க்குள் வராத பொருட்கள் மீதான செஸ் வரி பலகோடி ரூபாய்களுக்கும் மேல் வந்துள்ளது, இது மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்பதே தற்போது மாநிலங்களின் கோரிக்கையாக உள்ளது.

இதை வலியுறுத்திய மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, “எந்த ஒரு சூழ்நிலையிலும் மாநிலங்களை சந்தையிலிருந்து வருவாய் இழப்பை ஈடுகட்டுமாறு கூறக்கூடாது. இது கடன் சுமையையே அதிகரிக்கும். மேலும் மாநில செலவினங்களை குறைக்க வழிவகுக்கும். இது இந்த பொருளாதார சூழ்நிலையில் சாத்தியமில்லை, பொருளாதாரம் சரிவுப்பாதையில் இருக்கும் போது மாநிலங்கள் எப்படி செலவினங்களைக் குறைக்க முடியும்” என்று அவர் தன் கடிதத்தில் எழுதியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் மேற்கு வங்கத்துடன் பஞ்சாப், கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்கள் இணைந்தன. மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும் என்பதை இவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கருத்தை மேற்கோள் காட்டி மாநில வரிவருவாய் பின்னடைவுக்கு மத்திய அரசு ஈடுகட்ட வேண்டியதில்லை என்று கூறியதாக தெரிகிறது.

ஜிஎஸ்டி சட்டத்தின் படி ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகான முதல் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு மாநில அரசின் வருவாய் இழப்புகளுக்கு இழப்பீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டும். ஜிஎஸ்டி 5, 12, 18, மற்றும் 28% என்று பல்வேறு பொருட்களுக்கு ஏற்ப விதிக்கப்படுகிறது. 28% உயர்பட்ச வரியோடு ஆடம்பரப் பொருட்கள் மீது கூடுதல் செஸ் விதிக்கப்பட்டு இது மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை ஈடுகட்டுவதாக அமைக்கப்பட்டதாகும்.

2019-20-ல் மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ. 1.65 லட்சம் கோடி ரிலீஸ் செய்தது. இதே காலக்கட்டத்தில் வசூலிக்கப்பட்ட கூடுதல் செஸ் வரி தொகை ரூ.95,444 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. 2018-19-ல் அளிக்கப்பட்ட இழப்பீடு தொகை ரூ.69,275 கோடி, 2017-18-ல் ரூ.41,146 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x