Last Updated : 27 Aug, 2020 04:14 PM

 

Published : 27 Aug 2020 04:14 PM
Last Updated : 27 Aug 2020 04:14 PM

ஜார்கண்டில் மதநல்லிணக்க எடுத்துக்காட்டு: முஸ்லிம்கள் வசிக்காத கிராமத்தில் இந்துக்கள் நடத்தும் முஹர்ரம் ஊர்வலம்

ஜார்கண்டின் ஒரு கிராமத்தில் வருடந்தோறும் இந்துக்கள் முஹர்ரம் ஊர்வலம் நடத்துகின்றனர். ஒரு முஸ்லிம் கூட வசிக்காத இக்கிராமத்தில் இந்நிகழ்வு மதநல்லிணக்கத்திற்கு முன் உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

முஸ்லிம்களின் இஸ்லாமியக் காலண்டரின் முதல் மாதமாக வருவது முஹர்ரம். இதன் 10 ஆவது நாளில் முஹர்ரம் தியாகத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த வருடம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரும் இந்நாளில் முஸ்லிம்கள் ‘தாஜியா’ எனும் புனிதப் பதாகைகளை ஏந்தி தம் பகுதிகளில் ஊர்வலம் நடத்துவது வழக்கம். சமீப வருடங்களாக இந்த ஊர்வலத்தில் சிலசமயம் மோதல் உருவாகி அது மதக்கலவரமாகி விடுவதும் உண்டு.

இச்சூழலில், ஜார்கண்டின் கிரீதி மாவட்டத்தின் நவாதா எனும் கிராமத்தில் முஹர்ரம் ஊர்வலம், இந்துக்களால் நடத்தப்படுகிறது. இக்கிராமம், தலைநகரான ராஞ்சியிலிருந்து 230 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் வாழாத இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக இந்த முஹர்ரம் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. நவாதாவில் 70 யாதவர் மற்றும் 20 தலீத் சமூகத்து குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள், முஹர்ரம் ஊர்வலத்தின் சில இஸ்லாமியச் சடங்கிற்காக அருகிலுள்ள கிராமத்தில் ஒரு முஸ்லிம் மவுலானாவை அழைத்து வருகின்றனர்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கிரீதி கிராமவாசியான வினோத் யாதவ் கூறும்போது, ‘எப்போது முதல் இந்த ஊர்வலம் நடக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த ஊர்வலம் பற்றி எங்கள் எங்கள் தாத்தா காலத்திலும் பேசப்பட்டு வந்தது.

இங்கு ஒரு முஸ்லிம் குடும்பமும், மசூதியும் இல்லை. எனினும், இங்கு பல்லாண்டுகளாக இருக்கும் ஒரு முஸ்லிம்

சமாதியில் முஹர்ரம் ஊர்வலத்தின் தாஜியாக்களை வைக்கும் பழக்கம் உள்ளது.’ எனத் தெரிவித்தார்.

குறிப்பாக அக்கிராமத்து இளைஞர்களால் இந்த ஊர்வலம் நடத்துவது குறித்து நவாதா பஞ்சாயத்து கூடி ஆலோசனை செய்கிறது. தாஜியாக்களை பிடித்து வருபவர்கள் கட்டாயமாக முஸ்லிம் முறைப்படி நோன்பையும் கடைப்பிடிக்கின்றனர்.

ஊர்வலத்தினருக்காக வழிநெடுக குடும்பப் பெண்கள் கூடி நின்று உணவு அளிக்கும் வழக்கமும் உள்ளது. ஆனால், இந்த வருடம் கரோனா பரவல் சிக்கலால் ஊர்வலத்தில் கூட்டமும், உணவளிப்பதும் இருக்குமா? என்ற சந்தேகமும் கிரீதி கிராம இளைஞர்களிடம் எழுந்துள்ளது.

முஹர்ரம் ஏன்?

முஹர்ரம் அனுசரிப்பதில், முஸ்லிம்கள் இடையே பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் முக்கியமானதாக கி.பி 680(ஹிஜ்ரி 61) ஆம் ஆண்டில் கர்பாலா எனும் இடத்தின் போரில் இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசைன் வீரமரணம் இடம் பெற்றுள்ளது.

இதில் இமாம் உசைன் தரப்பினருக்கு ஏற்பட்ட தோல்வியால் அவர்கள் சிறிது காலத்திற்கு பின் தனிக்குழுவாக வெளியேறி ’ஷியா’ எனும் பெயரில் ஒரு புதிய பிரிவாயினர். இதனால், ஷியா முஸ்லிம்களால் முஹர்ரம் தீவிரமாக அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் பரவி வாழும் ஷியாக்கள், இந்தியாவில் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் அதிகம். முஹர்ரமின் பின்னணியில் உள்ள துக்கத்தை அறியாத சிலர், தம் முஸ்லிம் நண்பர்களுக்கு தவறுதலாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதும் உண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x