Last Updated : 27 Aug, 2020 09:06 AM

 

Published : 27 Aug 2020 09:06 AM
Last Updated : 27 Aug 2020 09:06 AM

தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்களே: மாநில பொறுப்பாளர் முரளிதர் ராவ் பேட்டி

புதுடெல்லி 

தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் இந்துக்களின் கடவுளான முருகனுக்கு எதிரானவர்களே என பாஜக பொறுப்பாளர் முரளிதர்ராவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளேட்டிற்கு அளித்த சிறப்புப் பேட்டி:

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராகிறதா?

மக்கள் தொண்டில் 24 மணி நேரமும் இருக்கும் தமிழக பாஜக, தேர்தலுக்கும் தயாராக உள்ளது. குறிப்பாக கரோனா வைரஸ் தொற்று பரவல் காலகட்டத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவிலும் மக்களுக்காகப் பணியாற்றி வருகிறோம். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் பிரச்சாரம் எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இருக்கும்.

இந்தமுறை அதிகத் தீவிரம் காட்டக் காரணம் என்ன?

தமிழகத்தில் முன்னாள் நக்சலைட்கள், பழைய நாத்திகவாதிகள், தமிழின் பெயரில் தீவிரம் காட்டுபவர்கள், ஆங்கில மொழியின் அடிமைகள் மற்றும் தமிழ் விரோதிகள் பாஜகவை எதிர்த்து வருகின்றனர். இவர்களுடன் எங்கள் கொள்கை ரீதியான மோதல் நடைபெற்று வருகிறது. இது தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும். தமிழகத்தில் கடவுள் முருகனை எதிர்த்து இந்து விரோதியாக இருப்பவர்கள் உண்மையில் தமிழ் இன விரோதிகள். முருகனை அகற்றி விட்டால் தமிழகம் இருக்காது. ஐந்தில் ஒரு பங்கு தமிழர்களின் பெயர்களில் முருகன் நேரடியாக இடம் பெற்றுள்ளார். அவரது பெயரை வைக்காதவர்களும் அன்றாடம் முருகனை தரிசிப்பவர்களே. எனவே, பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் கடவுள் முருகனுக்கு எதிரானவர்களே.

தமிழகத்தில் திடீரென முருகனை தூக்கிப்பிடிக்கும் நீங்கள் வட மாநிலங்களில் ராமர் அளவுக்கு கார்த்திகேயனை வணங்குவதில்லையே?

ராமர் ஒன்றும் கார்த்திகேயனுக்கு எதிரானவர் அல்ல. சிவன், பார்வதி உள்ள இடத்தில் கார்த்திகேயன் இல்லாமல் போவதில்லை. இந்தியர்களுக்கு சொந்தமான சிவனின் பிள்ளைகளான கணேசனை வட இந்தியக் கடவுளாகவும், கார்த்திகேயனை தென் இந்தியக் கடவுளாகவும் தமிழகத்தில்தான் பிரித்து பார்க்கப்படுகிறது. பலம் இருந்தால் இது உண்மை என திமுக, தமிழர்கள் முன்பாக நிரூபிக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் அமைந்த கூட்டணி சட்டப்பேரவை தேர்தலிலும் தொடருமா?

இப்போதைக்கு மக்களவைத் தேர்தலில் அமைந்த கூட்டணி உள்ளது. இது சட்டப்பேரவைக்கும் தொடருமா? என்பது அதன் தேர்தல் அறிவிப்பிற்குப் பின்தான் தெரியும். இதைப் பற்றி இப்போதே பேசினால் பாஜக மக்களவைத் தேர்தலின் கூட்டணிக்கு எதிரானது என அர்த்தமாகிவிடும். எனவே, சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி பற்றி பேசுவோம். இக்கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பதும் அப்போது முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் திமுக வெற்றி அடையாத வகையில் பாஜக நெருக்கடிகளை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறதே?

இதற்காக நாம் நெருக்கடி தர வேண்டிய அவசியமில்லை. வெற்றிவேலுக்கு எதிராக இருப்பவர்களை அவனே பார்த்துக் கொள்வான். 1950-ம் ஆண்டுக்கு முன்பாக திருவள்ளுவர் அணிந்திருந்த உடைகளை அவரது படங்களிலும், திருவள்ளுவரின் கோயில்களிலும் பாருங்கள். அதில் திருவள்ளுவர் அணிந்திருந்த காவி உடைகளை அகற்றியவர்கள் திமுகவினர். இதுபோல வரலாற்றின் உண்மைகளை மாற்றிவிட்டு பாஜகவின் மீது புகார் வைப்பது திமுகவினரின் வழக்கமாகி விட்டது.

அதிமுகவில் யார் முதல்வர் என்ற பிரச்சினையை பாஜக தீர்த்து வைத்ததாக இன்றும் பேசப்படுகிறது. இந்தச் சூழலில் மீண்டும் அதில் எழுந்துள்ள மோதலில் பாஜக தலையிடுமா?

அதிமுகவில் எழுந்த முதல்வர் பதவிக்கான மோதலில் பாஜக தலையிட்டதில்லை. இதை எங்கள் கட்சியின் சில தலைவர்கள் செய்தி
ருந்தால் அது, அவர்களது சொந்த விவகாரம். பாஜக எப்போதும் தன் கூட்டணிக் கட்சியாக மொத்த அதிமுகவை பார்க்கிறதே தவிர அதில் குறிப்பிட்டு எந்த ஒரு தலைவரையும் ஆதரித்ததில்லை. அவ்வாறு ஆதரிக்கவும் மாட்டோம்.

இப்பிரச்சினையில் தமிழகதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பாஜக செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளதே?

இது பத்திரிகைகளும், ஊடகங்களும் உருவாக்கிய புகார். இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது (வாய்விட்டு சிரிக்கிறார்).

தமிழக தேர்தலிலும் பிரதமர் மோடியின் புகழை பாஜக முன்னிறுத்துமா?

பிரதமர் மோடியின் புகழ் சர்வதேச அளவில் பரவி விட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட தனது பிரச்சார வீடியோவில் மோடியை சேர்த்துள்ளார். நிலைமை இப்படி இருக்க அவரது புகழ் தமிழகத்தில் மட்டும் எப்படி இல்லாமல் போகும்? மக்களவைத் தேர்தலைப் போல சட்டப்பேரவை தேர்தலிலும் அதன் வாக்காளர்களால் அதிக விருப்பத்திற்கு உரிய அவர் பிரதானமாக இருப்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x