Published : 27 Aug 2020 08:55 AM
Last Updated : 27 Aug 2020 08:55 AM

இறந்த கணவரின் பணப்பலன்களைப் பெறுவதற்கு முதல் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இறந்த கணவரின் பணப் பலன்களைப் பெறுவதற்கு முதல் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பணப் பலன்களைப் பெறுவதற்கு இரண்டு மனைவிகளின் குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிர ரயில்வே போலீஸில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் சுரேஷ் ஹதங்கர். கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மே 30-ம் தேதிஉயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் ரூ.65 லட்சம் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதைப் பெற சுரேஷ் ஹதங்கரின் இரண்டு மனைவி களும் விண்ணப்பித்தனர்.சுரேஷ் ஹதங்கருக்கு 2-வது மனைவி இருந்ததே தற்போதுதான் அவரது முதல் மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவரின் 2-வது மனைவியின் மகளான ஷ்ரத்தா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஜே.கதவாலா, மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அதில், வீடு மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் தனது தாயை காப்பாற்ற தனது தந்தையின் பணப் பலன்களில் இருந்து சரிசமமான தொகையை தங்களுக்கு தர உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

கணவரின் இரண்டு மனைவிகள் மூலமும் பிறந்த குழந்தைகளுக்கு பணப் பலன்களைப் பெற உரிமை உண்டு.ஆனால் சுரேஷ் ஹதங்கருக்கு 2-வது மனைவி இருப்பது தங்களுக்கு தெரியாது என்று முதல்மனைவி குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கு 2-வது மனைவி குடும்பத்தினர் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுரேஷ் ஹதங்கர் செய்த 2 திருமணங்களும், இந்து மத திருமணசட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதில், உயிரிழந்த கணவரின் பணப் பலன்களை பெற முதல் மனைவிக்குத்தான் உரிமை உண்டு. 2-வது மனைவிக்கு உரிமை இல்லை. ஆனால் கணவரின் இரண்டு மனைவிகள் மூலமும் பிறந்த குழந்தைகளுக்கு பணப் பலன்களைப் பெற உரிமை உண்டு என்று தீர்ப்பில் தெரிவித்தனர்.

மேலும் தனது கணவருக்கு 2-வது மனைவி இருப்பது தெரியுமா தெரியாதா என்பது தொடர்பாக தங்களது தரப்பு ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுரேஷ் ஹதங் கரின் முதல் மனைவி சுபதா, மகள் சுரபி ஆகியோருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x