

மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்த பாபாபாய் பதான் என்பவர், சகோதரிகளான 2 இந்து பெண்களை ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்து வளர்த்துள்ளார். அவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து இந்து முறைப்படியே திருமணமும் செய்து வைத்துள்ளார். இது அகமத் நகர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆரிஃப் ஷா என்ற செய்தியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மகாராஷ்டிராவில் உள்ள அகமத் நகரைச் சேர்ந்த பாபாபாய் பதான் என்ற முஸ்லிம், 2 ஆதரவற்ற சகோதரிகளை தத்தெடுத்து, அவரது சொந்த செலவில் இந்து முறைப்படி திருமணமும் செய்து முடித்துள்ளார். தனது மதத்தைக் கடந்த மனிதநேய செயலுக்காக
பாபாபாய் பதான் பாராட்டப்படுகிறார்” என்று கூறியுள்ளார்.
திருமணம் செய்து கணவர் வீட்டுக்கு தன்னை விட்டு பிரிந்து செல்லும் பெண்களை அணைத்தபடி பதான் கலங்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இது சமூக ஊடகங்களில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டு பாபாபாய் பதானை பாராட்டி
வருகின்றனர். சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் உருவாக்கும் பாபாபாய் போன்ற நல்ல உள்ளங்களை கொண்டாட வேண்டியது அவசியம் என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.