Published : 26 Aug 2020 07:58 PM
Last Updated : 26 Aug 2020 07:58 PM

5 ஆண்டுகளில், எம்பிபிஎஸ் படிப்பில் கூடுதலாக 26,000 இடங்கள்: ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்

கடந்த ஐந்து ஆண்டுகளில், எம்பிபிஎஸ் படிப்பில் சுமார் 26,000 இடங்களையும், முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் 30,000 இடங்களையும், நம்மால் கூடுதலாகச் சேர்க்க முடிந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளையும், மூன்று உயர் சிறப்பு மருத்துவப் பிரிவுகளையும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், மாநில முதல்வர் அசோக் கெலாட்டுடன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே முன்னிலையில் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் திறந்து வைத்தார்.

பில்வாரா ராஜமாதா விஜய ராஜே சிந்தியா மருத்துவக் கல்லூரி (ஆர்விஆர் எஸ்) மற்றும் பாரத்பூர் மருத்துவக்கல்லூரி ஆகியவை மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கோட்டா அரசு மருத்துவக் கல்லூரி, பிக்கானிர் சர்தார் பட்டேல் மருத்துவக் கல்லூரி, உதய்ப்பூர் ரவீந்திரநாத் தாகூர் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் உயர் சிறப்பு மருத்துவப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் ரூ.828 கோடி ஒருங்கிணைந்த முதலீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் ரூ.150 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகள் தலா 150 இளநிலை மருத்துவப் பட்ட இடங்களைக் கொண்டுள்ளன. பரத்பூர் மருத்துவக் கல்லூரி 34 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் உள்பட 525 படுக்கைகளையும், ஆர்விஆர்எஸ் மருத்துவக் கல்லூரி 12 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் படுக்கைகள் உள்பட 458 படுக்கைகளையும் கொண்டிருக்கும்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே உரையாற்றிய ஹர்ஷவர்தன், “கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 158 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 42 கல்லூரிகள், மத்தியத் திட்டத்தின் கீழ், மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளாகத் திறக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் 75 கல்லூரிகளுக்கு 2019-20-ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் வசதிகளற்ற மாவட்டங்களில், மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க இத்திட்டம் உதவுகிறது’’, என்று கூறினார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில், எம்பிபிஎஸ் படிப்பில் சுமார் 26,000 இடங்களையும், முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் 30,000 இடங்களையும், நம்மால் கூடுதலாகச் சேர்க்க முடிந்துள்ளது. நாட்டில், ஏராளமான எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதும், மருத்துவக் கல்வி இடங்களை அதிகரித்ததும், அரசு எடுத்த முன்முயற்சிகளுக்கும், சீர்திருத்தங்களுக்கும் கிடைத்த பலன் ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் மூன்றாம் நிலை கவனிப்பு அணுக்கத்தை மேம்படுத்துவதுடன், வசதி குறைந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதையும் விரைவுபடுத்தியுள்ளது,’’ என டாக்டர் ஹர்ஷவர்தன் மேலும் கூறினார்.

நாட்டில் மருத்துவக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு, நீட் என்னும் பொதுவான நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் கூறினார். விதிமுறைகளில் உரிய மாற்றங்களுடன், மாநில அளவில் பொதுக் கலந்தாய்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், மருத்துவ மாணவர் சேர்க்கையில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளதுடன், மாணவர்களின் தரம் மற்றும் மருத்துவக் கல்வியின் ஒட்டுமொத்த தரத்தையும் முன்னேற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“சுகாதாரக் கல்வியின் மற்ற பிரிவுகளிலும் இதே போன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.” சுகாதாரம் மற்றும் அதைச் சார்ந்த வல்லுநர்களுக்கான தேசிய ஆணைய மசோதா’’ என்னும் சுகாதார வல்லுநர்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கும் புதிய சட்டத்தை அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் போது, ஒழுங்குமுறையில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடம் நிரப்பப்படும். இதனால், 50-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில்முறை மருத்துவத்தில் மேம்பாடு ஏற்படும்’’ என்று டாக்டர் ஹர்ஷவர்தன் கூறினார்.

நாட்டில் பல்வேறு இடங்களில், மேலும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கும் பணி வேகமடைந்து வருவதை நாடு கண்டு வருகிறது. இதில், ஆறு முழுமையாக இயங்கி வருகிறது. பதினான்கில், எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x