

படேல் போராட்டம் ஒரு முக்கியமான பிரச்சினையை முன்னிறுத்துகிறது. இந்தியாவில் போதுமான அளவு வேலைவாய்ப்பு இல்லை என்பதே அப்பிரச்சினை. இப்போராட்டத்தை 'இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் புரட்சி' எனலாம் என்கிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் தலையங்கம்.
அந்தத் தலையங்கத்தின் சுருக்கம்:
"வளமானவர்கள் என்ற அடையாளம் கொண்ட படேல் சமூகத்தினரின் சமீபத்திய போராட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு பெரும் சவாலை முன்வைத்துள்ளது.
நாட்டின் முடங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன் என சீர்திருத்த திட்டங்களை அறிவித்து வரும் மோடிக்கு, இந்தியாவில் இன்னமும் போதிய வேலைவாய்ப்பு இல்லை என்பதை உணர்த்துவதுபோல் இப்போராட்டம் அமைந்துள்ளது.
கடந்த மாதம் படேல் சமூகத்தைச் சேர்ந்த 5 லட்சம் பேர் திரண்டு தங்களை ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்) சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தினர். மோடியை தேர்ந்தெடுத்ததில் பெரும் பங்கு வகிக்கும் படேல் சமூகத்தினரின் இந்தப் போராட்டம் பிரதமரின் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை வசைபாடுவதாகவே உள்ளது.
இந்திய மக்கள் தொகையான 1.2 பில்லியனில் பாதிக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது மிகவும் அவசியமானது.
இத்தகைய சூழலில் இளம் இந்தியர்கள், குறிப்பாக படேல் சமூகத்தினர் விரக்தியடைவதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை. கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்னர், குஜராத் மாதிரியைப் பயன்படுத்தி நாடு முழுவதும் வேலைவாய்ப்பினை உருவாக்கப்போவதாக மோடி தெரிவித்தார். ஆனால், இதுவரை தேசிய அளவில் எந்த ஒரு பெரிய சட்டத்தையும் மாற்ற முடியவில்லை.
இந்நிலையில், அவரது சொந்த ஊரிலேயே மாபெரும் போராட்டம் மூண்டுள்ளது, அவரது வளர்ச்சித் திட்டங்கள் எந்த அளவுக்கு குஜராத் மக்களுக்கு பயனுடையதாக இருந்தது என்பதை கேள்விக்குறியாக்குகிறது.
இப்படி ஒரு சூழலில், மோடிக்கு இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமே உள்ளன, தேர்தலின்போது அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு.
இதைப் புரிந்து கொண்டு அவர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த இளைஞர்கள் அவரை தேசத்தின் உயர் பதவியில் தூக்கி வைத்தனரோ அவர்களே அடுத்த தேர்தலில் அவரை பதவியில் இருந்து தூக்கி எறியவும் தயங்கமாட்டார்கள்"
இவ்வாறு அத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.