

மின்-சஞ்சீவனி மூலம் தொலை மருத்துவ ஆலோசனை சேவைகளை டெல்ல மற்றும் தேசிய தலைநகரப் பகுதியில் மத்திய அரசு தொடங்கியது.
மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் டிஜிட்டல் தளமான இ-சஞ்சீவனி மூலமாக 2 லட்சம் தொலைபேசி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.தொலைபேசி மருத்துவச் சேவை மூலமாக ஒன்றரை லட்சம் தொலைபேசி மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டது
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு சுகாதாரச் சேவைகளின் (CGHS) பயனாளிகள் சுகாதார மையத்துக்கு நேரில் வராமலேயே மெய்நிகர் முறையின் மூலம் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு வசதி ஏற்படுத்தும் விதமாக, தொலை-ஆலோசனைச் சேவைகளை 25.8.2020 முதல் CGHS தொடங்கியுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் இந்தச் சேவைகள் டெல்லி/தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள பயனாளிகளுக்குக் கிடைக்கும். இந்த மின்-சேவைகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் கிடைக்கும்.
சுகாதார அமைச்சகத்தின் ஏற்கனவே இருக்கும் மின்-சஞ்சீவனி தளத்தை CGHS-இன் தொலை-ஆலோசனை சேவைகள் பயன்படுத்துகின்றன. எளிதான பயன்பாட்டுக்காக பயனாளிகளின் அடையாள எண்ணுடன் இந்தத் தளம் இணைக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் வெளிநோயாளிகள் சேவைகளைப் பெறுவதற்கு, பயனாளிகள் தங்களது கைபேசி எண்ணைக் கொண்டு இந்தத் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, சரிபார்த்தலுக்காக ஒரு முறை கடவு எண் அனுப்பப்படும். சரிபார்த்தலுக்குப் பின்னர், பயனாளிகள் தளத்துக்குள் சென்று, நோயாளி பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அனுமதிச் சீட்டை கோரி, தங்களது சுகாதாரக் கோப்புகளை (தேவைப்பட்டால்) பதிவேற்றலாம்.
நோயாளிகளுக்கு நோயாளி அடையாள எண் மற்றும் அனுமதிச் சீட்டுத் தகவல்கள் குறுந்தகவல் சேவை மூலம் அனுப்பப்பட்டு, ஆன்லைன் வரிசையில் அவர்களது எண் குறித்துத் தகவல் அளிக்கப்படும். அவர்களது முறை வந்ததும், 'தற்போது அழைக்கவும்' பொத்தான் செயலாக்கப்படும்.
அதைப் பயன்படுத்தி, பயனாளி காணொலி அழைப்பு மூலம் நிபுணரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். தொலை-ஆலோசனைக்குப் பிறகு மின்-மருந்துச் சீட்டு அனுப்பப்படும். இதைப் பயன்படுத்தி, தங்களது CGHS ஆரோக்கிய மையத்திடம் இருந்து மருந்துகளை நோயாளிகள் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை விரைவில் மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.