

ஆந்திராவில் பெய்துவரும் கன மழை காரணமாக தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள் ளது. இதனால் விலை கட்டுப் படியாகாததால் விவசாயிகள் பலர் தக்காளியை சாலையில் கொட்டி அழித்து வருகின்றனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இடி தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 28 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சித்தூர் மாவட்டம், புங்கனூர், மதனபல்லி, சவுடேபல்லி, சதம், சோமலா ஆகிய பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி, மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் அதிகரித்த போதிலும் இங்கு தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மதனபல்லியை அடுத்துள்ள முலகலசெருவு எனும் பகுதியில் 30 கிலோ தக்காளி மொத்த சந்தையில் ரூ.70-க்கு விற்கப்படுகிறது. இதனால் அறுவடை, போக்குவரத்து செலவு கூட கிடைக்காததால், விவசாயி கள் வேறு வழியின்றி தக் காளியை சாலைகள், வயல் வெளிகளில் கொட்டி அழித்து வருகின்றனர்.
இப்பகுதியிலிருந்து விவசாயிகள் தக்காளியை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, வேலூர், சேலம், தர்மபுரி, ஈரோடு மற்றும் கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல், முல்பாகல், பெங்களூர், சிந்தாமணி போன்ற பல பகுதிகளுக்கு இப்பகுதிகளில் இருந்துதான் தினமும் தக்காளி விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.