Last Updated : 26 Aug, 2020 03:01 PM

 

Published : 26 Aug 2020 03:01 PM
Last Updated : 26 Aug 2020 03:01 PM

மூன்று மணி நேர நீட், ஜேஇஇ. தேர்வுகள்தான் திறமையை அடையாளப்படுத்தும் என்பது பழமையில் ஊறிய சிந்தனை: மணீஷ் சிசோடியா விளாசல்

ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை, பாதுகாப்புகளுடன் இருக்கும் போதே தலைவர்களையே கரோனா பீடித்துள்ள நிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த முடிவெடுத்து அதனால் 28 லட்சம் மாணவர்கள் கரோனாவினால் பாதிப்படைய மாட்டார்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி துணை முதல்வர், “அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். இதே தடுப்பு நடவடிக்கைகளைத்தான் நாடு முழுதும் கடைபிடித்து லட்சக்கணக்கானோர் கோவிட் காய்ச்சலுக்கு பாதிப்படைந்தனர். கரோனா பாசிட்டிவ் ஆன அந்த லட்சக்கணக்கான இந்தியர்களுடன் 28 லட்சம் மாணவர்களையும் சேர்க்க வேம்டும் என்று மத்திய அரசு எண்ணுகிறது போலும்.

பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என்றார் உள்துறை அமைச்சர், அவரே பாதிக்கப்படவில்லையா? டெல்லி சுகாதார அமைச்சர் உட்பட பல தலைவர்கள் பாதுகாப்பாக இருந்தும் கரோனாவுக்குத் தப்ப முடியவில்லை.

இப்படியிருக்கும் போது 28 லட்சம் மாணவர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடலாமா?

எனவே இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிக்காமல் பரீட்சைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இது போன்ற தேர்வுகள் மூலம்தான் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கல்வி ஆண்டு பூஜ்ஜியமாக வேண்டும் என்று நாங்களும் விரும்பவில்லை.

நமக்கு தரமான மருத்துவர்கள், பொறியாளர்கள் தேவை என்பதை மறுக்கவில்லை, அதற்காக இந்த 3 மணி நேர தேர்வுதான் மந்திரமாகச் செயல்பட்டு திறமைகளை அடையாளம் காட்டும் என்பது மிகவும் பழமையான ஒரு சிந்தனை” என்று விளாசியுள்ளார் மனீஷ் சிசோடியா.

முன்னதாக சுற்றுச்சூழல் சமூக ஆர்வலரான மாணவி கிரேட்டா துன்பெர்க், “கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இந்திய மாணவர்களை தேசிய தேர்வை எழுதச் செய்வது அநியாயமானது. இந்தத் தேர்வுகளை ஒத்தி வையுங்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x