

நான் மாதக்கணக்காக மேற்கொண்ட எச்சரிக்கைகளை ஆர்பிஐ தற்போது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ ஆண்டறிக்கை செவ்வாயன்று வெளியானது, அதில் நுகர்வு அளவில் பேரதிர்ச்சியைப் பொருளாதாரம் சந்தித்துள்ளதாகவும் மீட்சி என்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஏழைமக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரேட்டிங் நிறுவனங்கள் 2020-21-ல் முதல் காலாண்டில் ஜிடிபியில் 20% குறைவு ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
நான் மாதக்கணக்காக விடுத்த எச்சரிக்கையை தற்போது ஆர்பிஐ உறுதி செய்துள்ளது. அரசு என்ன செய்ய வேண்டுமெனில் செலவு செய்ய வேண்டும், கடன் மூலம் அல்ல. தொழிலதிபர்களுக்கு வரிக்குறைப்புக்குப் பதிலாக ஏழைகள் கையில் பணம் கொடுங்கள், பொருளாதாரத்தை நுகர்வின் மூலம் மீண்டும் தொடங்குக.
ஊடகங்கள் மூலம் நிலைமைகளை திசைத்திருப்புவது ஏழைகளுக்கு எந்த விதத்திலும் உதவாது, அல்லது பொருளாதார சீரழிவு மறைந்து விடாது.
என்று ராகுல் காந்தி ஆர்பிஐ ஆண்டறிக்கை தொடர்பான ஊடகச் செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் இணைத்து மத்திய அரசைச் சாடியுள்ளார்.