

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் பொது இடங்களில் குறிப்பாக ஹிண்டன் ஆற்றங்கரைப் பகுதியில் இனி யாராவது குப்பை கொட்டினால், அவர்கள் ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்கும் வகையில், குறிப்பிட்ட சில இடங்களில் காசியாபாத் மாவட்ட நிர்வாகத்தினர் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். அவை நிறைந்தவுடன் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங் களுக்கு எடுத்துச் சென்று குப்பைகளை கொட்டுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும். பின்னர் குப்பைகளின் தன்மைக்கேற்ப முறைப்படி அவற்றை தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
இதுபோல மாவட்டம் முழுவதும் உள்ள பொது இடங்களில் எந்த ஒரு தனி நபரோ, அதிகாரிகளோ கழிவுப் பொருட்களை கண்ட இடங்களில் போடவோ, எரிக்கவோ கூடாது. அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும். குறிப்பாக ஹிண்டன் ஆற்றங்கரைப் பகுதியில் குப்பைகளைக் கொட்டக் கூடாது. தனி நபரோ அதிகாரிகளோ இந்த விதிமுறைகளை மீறினால், அவர்கள் உடனடியாக சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த அபராதத் தொகையை விதிக்கவும் வசூலிக்கவும் மாவட்ட நிர்வாகத்தினருக்கும் காவல் துறையினருக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. அபராதத் தொகையை செலுத்தத் தவறுபவர்கள் குறித்து தீர்ப்பாயத்தில் புகார் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.