

புல்வாமா தாக்குதல் வழக்கில் ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 பிப்ரவரி 14-ம்தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத் தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது கடந்த2019 பிப்ரவரி 26-ம் தேதி இந்தியவிமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை உளவுத் துறை உறுதி செய்தது.
13,500 பக்க குற்றப் பத்திரிகை
புல்வாமா தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் ஜம்முவில் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ நேற்று13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் (52), அவரது தம்பி அப்துல் ராப் அஸ்கர் (47), அமர் ஆல்வி, ஷகீர் பஷீர், இன்ஷா ஜன், பீர் தாரிக் அகமது ஷா, வாசிம் அல் இஸ்லாம், முகமது அப்பாஸ், பிலால் அகமது, முகமது இஸ்மாயில், சமீர் அகமது தார், அசீக் அகமது, அடில் அகமது, முகமது உமர் பாரூக், முகமது கம்ரான் அலி, சாஜித் அகமது பட், முடாசிர் அகமது கான், குவாரி யாசீர் ஆகிய 19 தீவிரவாதிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன. இதில் 7 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆவர்.
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங் கள் கூறியதாவது:
குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிரவாதிகளில் 6 பேர் என்கவுன்ட்டர்களில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் முகமது உமர் பாரூக்கும் ஒருவர். அவரை சுட்டுக் கொன்றபோது அவரது செல்போன் கைப்பற்றப்பட்டது. அதில் முக்கிய டிஜிட்டல்ஆதாரங்கள் கிடைத்தன.
அதன்பேரில் காஷ்மீரின் ஹாஜிபால் பகுதியை சேர்ந்த பிலால் அகமதுவை கடந்த மாதம் 5-ம் தேதி கைது செய்தோம். புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அவர் அதிநவீனசெல்போன்களை கொடுத்துள் ளார். அந்த செல்போன்கள் மூலமாகவே பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளும் காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகளும் உரையாடி உள்ளனர். அவர்களது உரையாடல்கள் அடங்கிய ஆடியோ பதிவுகள், வாட்ஸ் அப் பரிமாற்றங்கள், புகைப்பட, வீடியோ பரிமாற்றங்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து உள்ளிட்டவை ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2001 நாடாளுமன்ற தாக்குதல், கடந்த 2008 மும்பை தாக்குதல் வழக்குகளில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார், புல்வாமா தாக்குதலிலும் பிரதான எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உள்ளிட்ட 7 பாகிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்வதுதொடர்பாக சர்வதேச சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு என்ஐஏ வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
மசூத் அசார் எங்கே?
ஜெய்ஷ் -இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத்அசாரை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது. இவரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்திருக்கிறது. மசூத் அசார்பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக இந்திய, சர்வதேச உளவுஅமைப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன. ஆனால் அவரை காணவில்லை. அவர் எங்கிருக்கிறார்என்பது தெரியவில்லை என்று பாகிஸ்தான் வாதிட்டு வருகிறது.