Published : 25 Aug 2020 04:34 PM
Last Updated : 25 Aug 2020 04:34 PM

பாஜகவில் இணைந்தது ஏன்? - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பேட்டி

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் முரளிதரராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன், அண்ணாமலை

புதுடெல்லி

பாஜகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியில் இன்று இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். அங்கு பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றியபோது கடும் நடவடிக்கைகளால் அங்கு பெயர் பெற்றார்.

பெங்களூர் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையராகவும் அண்ணாமலை பணியாற்றினார். கடந்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான தமிழகம் திரும்பினார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர் இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதுமட்டுமின்றி அவர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவான கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். இதனால் அவர் விரைவில் அரசியல் கட்சியில் சேரவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் டெல்லியில் பாஜக பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் முருகன் உடன் இருந்தார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அண்ணாமலை

பின்னர் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில் ‘‘தமிழகத்தில் சமீபகாலமாக பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள் என பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து வருகின்றனர்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பாரத பிரதமர் மோடியால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதே. அந்த வரிசையில் அண்ணாமலை இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கர்நாடகாவில் துணைச்சலாக பணியாற்றி பெயரெடுத்தவர். அவரை பாஜகவுக்கு வருக வருக வரவேற்கிறேன்.’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேசியதாவது:

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

இந்த திருக்குறள் அரசன், ஒரு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த திருக்குறள் கூறுகிறது. பயமின்மையை பற்றி இது கூறுகிறது. ஈகையை பற்றி கூறுகிறது. அறிவை பற்றி கூறுகிறது. ஊக்கத்தை பற்றி கூறுகிறது. இந்த நான்கும் கொண்டவராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார், பாஜகவின் மற்ற மூத்த தலைவர்களும் உள்ளனர்.

எனவே தான் பாஜகவில் இணைய முடிவெடுத்தேன். பாஜகவின் கொள்கைக்கு வலிமை சேர்ப்பது என முடிவு செய்தேன். அதன் அடிப்படையிலேயே பாஜகவில் இணைந்துள்ளேன்.

ஒரு போர் வீரனாக இருந்து இந்த கட்சியில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் தேசிய உணர்வை வளர்த்ததெடுக்க வேண்டிய தேவை இருப்பது பற்றி தலைவர்கள் கூறினார்கள். அதனை எனது பணியாக செய்வேன். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் எனது நேரத்தையும், திறனையும் இந்த கொள்கைகளை வளர்க்க பணியாற்றுவேன். எனக்கு இந்த வாய்ப்பளித்த மாபெரும் இயக்கமான பாஜவுக்கு என நன்றி தெரிவித்துக் கொள்கிறனே். பதவிக்காக வரவில்லை தொண்டராக இங்கு வந்துள்ளேன். இந்த கட்சியின் எனக்கு முன்பாக பல கோடி பேர் இந்த கட்சிக்காக பெரும் பணியாற்றியுள்ளனர். எதையும் எதிர்பார்த்து கட்சிக்கு வரவில்லை. சாதாரண தொண்டாக இருந்து பணியாற்றவே வந்துள்ளேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x