

கபினி, மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் ஆர்பாட்டம் நடத்தினர்.
மைசூருவில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்துக்குள் புகுந்த ஆர்பாட்டக்காரர்கள் அங்கு ஜன்னல்களை உடைத்தெறிந்தனர்.
தலைமைப் பொறியாளர் பி.ஷிவசங்கர் அப்போது அலுவலகத்தில் இல்லை. ஆர்பாட்டக்காரர்களை போலீசார் சமாதானம் செய்தனர், அதாவது அமைதியாக் போராட்டம் நடத்தவே அனுமதி வழங்கப்பட்டது என்று அவர்கள் விவசாயிகளிடமும், கன்னட ஆதரவாளர்களிடமும் தெரிவித்தனர்.
அதன் பிறகு அலுவலகத்துக்கு வெளியே கோஷமிட்டனர்.
இது பற்றி விவசாய அமைப்பின் தலைவரும், கர்நாடகா கரும்பு வளர்ப்பு கூட்டமைப்பின் தலைவருமான குருபுர் சாந்தகுமார் கூறும்போது, “மாநிலம் கடும் வறட்சியில் இருக்கும் போது, எந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள்? மழை பொய்த்து விட்டதால் இங்கு பயிர்கள் நாசமடைந்துள்ளன. மேலும் மைசூரு உட்பட பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது” என்றார்.