Last Updated : 25 Aug, 2020 08:31 AM

 

Published : 25 Aug 2020 08:31 AM
Last Updated : 25 Aug 2020 08:31 AM

'காங். நிலை பரிதாபம்; பாஜகவில் சேர்வதற்காக பல தலைவர்கள் காத்திருக்கிறார்கள்'- பினராயி விஜயன் கடும் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் பாஜகவின் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்கள். சொந்தமாக ஒரு தலைவரைக்கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று கேரள சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் முதல்வர் பினராயி விஜயன் காட்டமாகப் பேசினார்.

கேரளாவில் நேற்று ஒருநாள் மட்டும் சட்டப்பேரவை கூடியது. இதில் பட்ஜெட்டுக்கான நிதி மசோதா முதலில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ சதீஸன், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசினார்.
அதைத் தொடர்ந்து ஆளும் கட்சி சார்பிலும் எதிர்க்கட்சித் தரப்பிலும் பல எம்எல்ஏக்கள் பேசினர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது ஏறக்குறைய 9 மணி நேரம் விவாதம் நடந்தது.

இதைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு மேல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்களும், எதிராக 87 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

விவாதத்தின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் 4 மணிநேரம் பேசினார். தனது உரையில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது:

''காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிக் குழுப்பம் உச்சத்தில் இருக்கிறது. மூத்த தலைவர்கள் ஒருவொருக்கொருவர் பாஜக ஏஜெண்ட் என்று விமர்சித்துக் கொள்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைப் பதவிப் பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. ஒரு தரப்பினர் ஒட்டுமொத்த முழுத்தலைமையைக் கேட்கிறார்கள், மற்றொரு தரப்பினர் காந்தி குடும்பத்தார் தலைமை ஏற்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

கேரளாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் தாக்கல் செய்கிறது. டெல்லி காங்கிரஸில் மற்றொரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடக்கிறது.

மூத்த தலைவர் கபில் சிபல் வெளிப்படையாகவே நான் பாஜக சார்பானவர் இல்லை எனத் தெரிவித்தார். பின்னர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றார்.

கடந்த 1980-களில் கேரள மாநிலத்தில் ஆண்ட காங்கிரஸ் கட்சி, இனிமேல் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வர முடியாது என்று சவால் விட்டது. ஆனால், அதன்பின் 4 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது.

சொந்தமாக ஒரு தலைவரைக் கூட காங்கிரஸ் கட்சியால் தேர்வு செய்ய முடியாத நிலையில்தான் கட்சி இருக்கிறது. கட்சியில் தலைமைப் பதவியில் மாற்றம் தேவை என மூத்த தலைவர்கள் கடிதம் எழுதும் நிலைதான் இருக்கிறது. இந்தக் கடிதத்தால் சோனியா காந்தியும் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டுவிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா.

ராகுல் காந்தி ஏற்கெனவே தலைவர் பதவியிலிருந்து விலகி, ஏற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து ஒருநிலைப்பாட்டில் ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறார்களா, அவ்வாறு நடந்துள்ளதா?

அயோத்தி விவகாரத்தில்கூட காங்கிரஸ் கட்சியில் ஒருதரப்பினர் எதிர்க்கின்றனர், மற்றொரு தரப்பினர் ஆதரிக்கின்றனர். இரட்டை நிலைப்பாட்டுடன் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் எங்கள் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் பாஜகவின் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்கள். பாஜக அழைத்தால், எப்போது வேண்டுமானாலும் அங்கு போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தொலைபேசி அழைப்புக்காகவே காத்திருக்கிறார்கள்.

மத்தியில் பல்வேறு மதச்சார்பற்ற அரசுகளை வீழ்த்த பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி செயல்பட்டுள்ளது. மதச்சார்பின்மை மீதான உங்கள் சித்தாந்தத்தையும் அடையாளத்தை விட்டுவிட்டு பாஜகவின் பி டீம் போல செயல்படுகிறீர்கள். கேரளாவில் அதேபோல நடக்கிறது.

காங்கிரஸ், முஸ்லிம் லீக், பாஜக இடையே ரகசியமான உறவு இருக்கிறது. கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர்கள் சேர்ந்து ஒருதரப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். அரசுக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியாததால், நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்''.

இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x