Published : 25 Aug 2020 06:35 AM
Last Updated : 25 Aug 2020 06:35 AM

காணொலி மூலம் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு; காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார்- அடுத்த 6 மாதங்களில் புதிய தலைவரை தேர்வு செய்ய திட்டம்

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலை வராக சோனியா காந்தியே நீடிப்பார் என்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சோனியாவுக்கு உதவ சிறப்பு குழுவை நியமிக்கவும், அடுத்த 6 மாதங் களில் கட்சிக்கு புதிய தலைவரை தேர் ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 1998 முதல் 2017 வரை காங் கிரஸ் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தார். உடல்நலக் குறைவு காரணமாக 2017 டிசம்பரில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். புதிய தலைவராக அவரது மகன் ராகுல் காந்தி, 2017 டிசம்பர் 16-ம் தேதி பதவியேற்றார்.

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்ன டைவை சந்தித்தது. இதற்கு பொறுப் பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து 2019 ஆகஸ்ட் 10-ம் தேதி காங்கிரஸின் தற்காலிக தலை வராக சோனியா காந்தி பதவியேற் றார். நிரந்தர தலைவரை தேர்ந் தெடுக்கும்வரை ஓராண்டுக்கு அவர் தற்காலிக தலைவராக நீடிப்பார் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. அவரது ஓராண்டு பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது.

இந்தச் சூழலில் சோனியா காந் திக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப் பினர். பூபிந்தர் சிங் ஹூடா, பிருத்வி ராஜ் சவாண், கபில் சிபல், சசி தரூர், முகுல் வாஸ்னிக், மிலிந்த் தியோரா, ஜிதின் பிரசாத் உள்ளிட்ட 23 பேர் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். தேசிய அளவில் பாஜகவின் வளர்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியின் செல் வாக்கை குறிப்பிட்டு, அதற்கு இணை யாக காங்கிரஸில் துடிப்பான புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த மார்ச் மாதம் தனது ஆதரவாளர் களுடன் பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் காங் கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அந்த மாநிலத் தில் கட்சியின் செல்வாக்கும் சரிந்துள் ளது. ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் முதல்வருக்கு எதி ராக போர்க்கொடி உயர்த்தி, ஒரு மாதம் தனி அணியாக செயல்பட்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பியுள்ளனர். இதுபோன்ற விவகாரங்கள் காங் கிரஸை பலவீனப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயரிய அமைப்பான காரிய கமிட்டி கூட்டம், காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அகமது படேல், அஜய் மக்கன், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், உம்மன் சாண்டி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலில் சோனியா காந்தி பேசி னார். அப்போது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முன்வந்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு அடுத்து வேணுகோபா லும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பேசினர். அவர்கள் பேசும் போது, ‘‘கட்சியின் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். புதிய தலை வரை நியமிக்க கோரி கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களை இருவரும் விமர்சித்தனர்.

அதன்பிறகு ஏ.கே.அந்தோணி பேசும்போது, ‘‘புதிய தலைவரை நியமிக்கக் கோரி அனுப்பப்பட்ட கடி தத்தின் வார்த்தைகள் மிகவும் மோச மாக உள்ளன. சோனியா காந்தியின் தியாகங்களை அவர்கள் மறந்துவிட்டது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி ஆவேசம்

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்காரணமாக கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்ட தாக தெரிகிறது. இறுதியில் முக்கிய தீர்மானத்தை மன்மோகன் சிங், முன் மொழிந்தார். அதன்படி, கட்சியின் தற் காலிக தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. கட்சி அலுவல்களில் நாள்தோறும் அவருக்கு உதவி செய்ய சிறப்பு குழுவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக சோனியா காந்தி பேசும் போது, ‘‘நடந்த சம்பவங்களை மாற்ற முடியாது. இனிமேல் நடக்க வேண்டிய வற்றை கவனிப்போம். முன்னேறி செல்வோம்’’ என்று கூறினார்.

‘‘சுமார் 7 மணி நேரம் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. கட்சித் தலைவர் பதவி யில் இருந்து விலக சோனியா காந்தி முன்வந்தார். அதை காரிய கமிட்டி ஏற்கவில்லை. இப்போதைக்கு அவரே தற்காலிக தலைவராக நீடிப் பார். அடுத்த 6 மாதங்களில் கட்சிக்கு நிரந்தர தலைவர் தேர்வு செய்யப் படுவார்’’ என்று காங்கிரஸ் வட்டாரங் கள் தெரிவித்தன.

பாஜகவுடன் மூத்த தலைவர்கள் தொடர்பு?

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 23 மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம்தான், நேற்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருந்தது.
சோனியா காந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் கட்சிப் பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. கட்சிக்குள்ளேயே ராகுல் காந்தி மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் இதன்காரணமாகவே முழுநேர, துடிப்பான தலைமை தேவை என்று கட்சித் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு 200-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனரா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியானது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனது கோபத்தை ட்விட்டரில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
 ‘நாங்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸுக்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் போராடினேன். மணிப்பூரில் பாஜக அரசுக்கு எதிராக போராடினேன். கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் கூறியது கிடையாது. அப்படி இருந்தும் நாங்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளோமோ’ என்று கேள்வி எழுப்பினார்.

எனினும், பின்னர் அவர் தனது ட்விட்டர் பதிவை நீக்கினார். இதுபற்றி கபில் சிபல் கூறும்போது, "ராகுல் காந்தியே நேரடியாக பேசி விளக்கம் அளித்தார். எனவே, பதிவை நீக்கிவிட்டேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x