மன்னிப்பு கேட்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்: கோப்புப் படம்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்: கோப்புப் படம்.
Updated on
2 min read

நீதித்துறைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அவமதிப்பு கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது. எனது நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் பேசினேன். அதிலிருந்து மாற்றமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார். நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி அறிவித்தது.

தண்டனை விவரங்களை 20-ம் தேதி அறிவிப்போம் என அறிவித்திருந்தது. அன்றைய தினம் விசாரணை நடந்தபோது, பிராசந்த் பூஷண் மன்னிப்பு கேட்க 3 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம். 24-ம் தேதி விசாரணைக்கு மீண்டும் எடுக்கப்படும் என நீதிபதிகள் அவகாசம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “ நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான் நேர்மையற்ற முறையில் கேட்கும் மன்னிப்பு என் மனசாட்சியையும், புனிதமாகக் கருதும் நீதித்துறையையும் அவமதித்தது போலாகும்.

நம்பிக்கைகளை வெளிப்படுத்தகக்கூடிய எனது நிபந்தனையுடன் அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு நேர்மையற்றதாகிவிடும். சிறப்பான நிலையிலிருந்து விலகிச் செல்லும்போது அதுகுறித்து நான் பேசுவது எனது கடமை என நம்புகிறேன்.

என் மீதான நன்னம்பிக்கையில்தான் கருத்துத் தெரிவித்தேனே தவிர, உச்ச நீதிமன்றத்தையோ அல்லது தலைமை நீதிபதியையோ அவமானப்படுத்தும் வகையில் பேசவில்லை.

ஆனால், அரசியலமைப்பின் பாதுகாவலர் மற்றும் மக்கள் உரிமைகளின் பாதுகாவலர் என்ற நீண்டகால நிலையிலிருந்து நீதிமன்றம் எந்தவொரு சறுக்கலும் இல்லாமல், ஆக்கபூர்வமான விமர்சனங்களை வழங்க வேண்டும்.

என்னுடைய கருத்துகள் என் நம்பிக்கைக்கான நற்சான்றின் பிரதிநிதிகள். இதில் நான் வலுவாக இருப்பேன். நீதிமன்றத்துக்கு விஸ்வாசமான அதிகாரி, பொறுப்புள்ள குடிமகனுக்குரிய கடமைகள் என்ற வகையில் பொதுவெளியில் வெளிப்படுத்திய இந்தக் கருத்தை நான் நம்புகிறேன்.

மன்னிப்பு என்பது வெறும் தூண்டுதலாக இருக்க முடியாது, எந்தவொரு மன்னிப்பும் நீதிமன்றம் கூறியது போல, நேர்மையாகச் செய்யப்பட வேண்டும்.

நான் அறிக்கைகளை நேர்மையாகவும், உண்மையாகவும் முழு விவரங்களோடு மன்றாடினேன், அவை நீதிமன்றத்தால் தீர்க்கப்படவில்லை.

இப்போது இந்த நீதிமன்றத்தின் முன் ஒரு அறிக்கையை நான் திரும்பப் பெற்றாலோ, இல்லையெனில் நான் உண்மை என நம்பினாலோ அல்லது ஒரு நேர்மையற்ற மன்னிப்பு கோரினாலோ என் மனசாட்சியையும், நான் மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதும் நீதிமன்றத்தையும் அவமதித்ததாக மாறிவிடும்''.

இவ்வாறு பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in