திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்கிய முடிவைத் திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் ‘ஒருமனதாக’ தீர்மானம் நிறைவேற்றம்

கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானத்தை முன்வைத்து பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ
கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானத்தை முன்வைத்து பேசிய காட்சி | படம்: ஏஎன்ஐ
Updated on
2 min read

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்தின் பராமரிப்புக்கு 50 ஆண்டுகள் ஏலத்தில் ஒப்படைத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட ஒப்புதல் வழங்கப்பட்டது

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு ஏலத்தில் ஒப்படைத் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கடந்த வாரம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஒருநாள் மட்டும் கூடியது. அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன், தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.

அவர் பேசியதாவது:

“ திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகள் குத்தகைக்கு அதானி குழுமத்துக்கு மத்திய அரசு ஏலத்தில் வழங்கிய முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

விமான நிலையத்தில் பெரும்பகுதிப் பங்கு மாநில அரசுக்கு இருப்பதால், அதை அதானி குழுமத்துக்கு வழங்கக் கூடாது.

அதானி குழுமம் டெண்டரில் குறிப்பிட்டிருந்த அதே விலையை வழங்க கேரள அரசும் தயாராக இருக்கிறது. ஆனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது”.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில், “மாநில அரசு கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை மாநிலத்தின் நலனுக்காக நாங்கள் ஆதரிக்கிறோம். அதேசமயம், தனியார் மயமாக்கலில் இரட்டை நிலைப்பாடு எடுக்கும் அரசையும் கண்டிக்கிறோம்

அதானி குழுமத்தின் தலைவர் அதானியின் நெருங்கிய உறவினர் நடத்தும் சட்ட நிறுவனத்திடம் கேரள அரசு ஏலம் விவகாரத்தில் ஆலோசனை கேட்டுச் செயல்பட்டுள்ளது.

விமான நிலையத்தை ஏலம் எடுக்கும் போட்டியாளர்களில் அதானி குழுமும், கேரள அரசும், ஒரே சட்ட நிறுவனத்திடம் ஆலோசனை பெற்றுள்ளன. இது ரகசியமாக அதானி குழுமத்துக்கு உதவுவதுபோல் இருக்கிறது. இதில் கிரிமினல் சதி இருப்பதாகவே கருதுகிறோம்.

கொச்சி விமான நிலையத்தை தனியாமர் மயமாக்கும்போது ஏன் சட்டநிறுவனத்திடம் ஆலோசனையை அரசு பெறவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது பதில் அளிக்க முதல்வர் பினராயி விஜயன் எழுந்தபோது, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

பினராயி விஜயன் பேசுகையில், “விமான நிலைய விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு வெளிப்படையானது. சட்ட நிறுவனம் ஆலோசனை மட்டும் கூறியது. டெண்டரில் குறிப்பிட்ட தொகைக்கும் சட்ட நிறுவனத்துக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து விவாதம் முடிந்த நிலையில் பேரவைத் தலைவர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன், அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கும் பாஜகவின் எம்எல்ஏ ஓ.ராஜகோபால், தனக்குப் பேச வாய்ப்பு வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தார்.

தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்யக் கோரி சட்டப்பேரவைக்கு வெளியே பாஜகவின் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரவைக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in