

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்து சிபிஐ நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கர சேவகர்கள் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அதை இடித்து தரைமட்டமாக்கினர்.
இது தொடர்பாக பாஜக மூத்ததலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்ளிட்டவர்கள் மீது உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் 8-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேரிடம் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 313-ன் கீழான விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நடத்தி முடித்து விட்டது.
அதே நேரத்தில் வழக்கு நடவடிக்கைகளை முடித்து, தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுஉச்ச நீதிமன்றத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் அறிக்கை அனுப்பினார்.
அதை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.