

இருபத்தியொன்றாம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் நேற்று சான்ஜோஸ் நகரில் சுமார் 18,500 இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு மணித்துளியும் இந்தியாவுக்காக உழைக்கிறேன். எனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன். நாட்டுக்காக உயிரைக் கொடுக்கக்கூட தயங்கமாட்டேன்.
இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். அதுதான் இந்தியாவின் பலம். இந்தியா வில் உயர் கல்வி பயின்று வெளிநாடுகளில் பணியாற்று வோரின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. அது இப்போது இந்தியாவுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவுக்கு வந்துள் ளேன். அதன்பிறகு இந்த மாகாணம் எவ்வளவோ மாற்றங்களை கண்டி ருப்பதை இப்போது கண்கூடாக பார்க்கிறேன். இம்மாகாணத்தில் இந்தியர்களின் திறமையை, வலிமையை நேரடியாக உணர முடிகிறது.
கணினிசார் துறையில் இந்தியர் களின் அபாரத் திறமையை உலகமே வியந்து பாராட்டுகிறது. இந்திய சாப்ட்வேர் நிபுணர்களின் சிந்தனைகள் உலகத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக அமையும் என்பதில் சந்தேக மில்லை.
இந்தியாவில் எனது தலைமை யிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன் ‘ஜன் தன்’ திட்டம் தொடங் கப்பட்டது. இதில் நூறே நாட்களில் 18 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து இப்போது செல்போன் மூலம் அரசு சேவைகளை வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளோம். இதன் மூலம் ஊழல் அறவே ஒழிக்கப்படும் என்று நம்புகிறேன்.
இன்றைய உலகம் இரண்டு மிகப் பெரிய சவால்களை எதிர்நோக்கி இருக்கிறது. ஒன்று தீவிரவாதம், மற்றொன்று பருவநிலை மாறுபாடு. இந்த விவகாரங்களில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
இந்தியா ஓர் அமைதி தேசம். புத்தர், காந்தி போன்ற மாபெரும் தலைவர்கள் இந்திய மண்ணில் பிறந்துள்ளனர். அமைதியையும் அஹிம்சையையும் காலம் காலமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.
எனவே தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உரக்க குரல் கொடுக்கும். இந்தப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. சபையில் விரிவாக எடுத்துரைப்பேன்.
ரூ.1000 கோடி ஊழல்
இந்தியாவில், அரசியல்வாதி களுக்கு எதிரான புகார்கள் ஏராளம் உள்ளன. ஒருவர் ரூ.50 கோடி ஊழல் செய்தார். அவரது மகன் ரூ.250 கோடி ஊழல் செய்தார். அவரது மகள் ரூ.500 கோடி ஊழல் செய்தார். அவரது மருமகன் ரூ.1,000 கோடி ஊழல் செய்தார்.
அவரது உறவினர்கள் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றனர். சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் பெற்றனர்.
இவற்றால் நீங்கள் நொந்து போனீர்களா இல்லையா? உங்களுக்கு கோபம் ஏற்பட வில்லையா? என் தேசத்து மக்களே, நான் உங்கள் மத்தியில் நிற்கிறேன். எனக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டு உள்ளதா? (பார்வையாளர்கள் இல்லை என ஆர்ப்பரித்தனர்).
ஊழல் கலாச்சாரத்தில் நாடு திளைத்திருந்தது. எனது தலைமையிலான பாஜக அரசு ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒபாமாவுடன் சந்திப்பு
சிலிகான்வேலி பயணத்தை நேற்று நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து நியூயார்க் சென்றார். அங்கு நேற்று இரவு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் மூன்றாவது முறையாக நேற்று சந்தித்தனர்.