

மூணாறு நிலச்சரிவில் 2 வயது குழந்தையின் உடலை கண்டுபிடித்த நாயை போலீஸ் காவலர் ஒருவர் தத்து எடுத்துக் கொண்டார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் பலத்த மழை காரணமாக கடந்த 6-ம் தேதி இரவு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 30 ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளில் வசித்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் புதையுண்டனர். இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்டது முதல் அங்கு 2 உள்ளூர் நாய்கள் சுற்றி வந்தன. மீட்புப் பணிக்கு தொடக்கத்தில் மோப்ப நாய்களை போலீஸார் பயன்படுத்திய போதிலும் குளிரான கால நிலையால் அவை பாதிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு உள்ளூர் வளர்ப்பு நாய்களை போலீஸார் பயன்படுத்தினர்.
இதில் 8-ம் நாள் மீட்புப் பணியில் ஒரு பாலத்துக்கு அருகில் தனுஷ்கா என்ற 2 வயது சிறுமியின் உடலை மீட்க, கூவி என்ற வளர்ப்பு நாய் உதவியது. இந்த நாயை தனுஷ்காவின் குடும்பத்தினர் வளர்த்து வந்ததாகவும் அவர்களிடம் இந்த நாய் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிய வந்தது. நிலச்சரிவில் தனுஷ்காவின் பாட்டி மட்டுமே உயிர் தப்பினார்.
இந்நிலையில் வளர்ப்பு நாய் கூவி, தண்ணீரோ உணவோ எடுத்துக் கொள்ளாமல் சம்பவ இடத்திலேயே சுற்றி வந்தது. இது மீட்புப் படையினர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பலரது இதயங்களை வென்றது.
இந்நிலையில் கூவியை, மாவட்ட மோப்ப நாய் படையில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிவில் போலீஸ் காவலர் அஜித் மாதவன் தத்து எடுத்துக் கொண்டார். இதற்கு போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. மோப்ப நாய் படையில் கூவியும் சேர்க்கப்படுமா, அதற்கும் பயிற்சி வழங்கப்படுமா என்ற விவரம் தெரியவில்லை.