

அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ராம்விலாஸ் பாஸ்வானின் ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பாஜக தேர்தலைச் சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று அறிவித்தார்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானுக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே சமீபகாலமாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பை ஜே.பி.நட்டா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாதத்தில் 20-ம் தேதிக்குள் பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிகிறது. ஆதலால், அதற்கு முன்பாக அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் முதல் பகுதியில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இதில் தற்போது பிஹாரில் கூட்டணியில் இருக்கும் பாஜக, ஜேடியு, எல்ஜேபி ஆகிய கட்சிகள் மீண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
பிஹார் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''பிஹாரில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக்ஜனசக்தி கட்சி ஆகியவற்றுடன் இணைந்துதான் பாஜக தேர்தலைச் சந்திக்கும். முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரை முன்நிறுத்தியே பிரச்சாரம் செய்யப்படும். பிஹாரில் இந்த முறையும் நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்.
மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் நீண்டகாலமாக ஆட்சியில் இல்லாமல் இருக்கிறார்கள். மாநிலத்தில் பாஜக மீது மட்டும்தான் மக்களுக்கு நம்பிக்கை இருந்து வருகிறது.
எதிர்க்கட்சிகளிடம் உற்சாகமும் இல்லை, தொலைநோக்குப் பார்வையும் இல்லை, மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற துடிப்பும் இல்லை. கீழ்த்தரமான அரசியலை விட்டு அவர்களால் மேலே வர முடியாது.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் அதைக் கட்டுப்படுத்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட காலத்திலும் விரைவாகச் செயல்பட்டு மக்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, தேவையான உதவிகளை வழங்கி சிறப்பாகச் செயல்பட்டது.
பிரதமர் மோடி அறிவித்துள்ள சிறப்பு நிதித் திட்டம் அவர் கூறியபடி நடைமுறைப்படுத்தப்படும், அதற்குரிய விவரங்களுடன் மாநில பாஜக மக்களைச் சென்றடையும்.
கரோனா காலத்தில் மக்களுக்குச் சிகிச்சையளிக்க மத்திய அரசு சார்பில் 12 லட்சத்து 50 ஆயிரம் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் கோவிட் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை எனும் இலக்கை எட்டியிருக்கிறோம். கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 74 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
கரோனா காலத்தில் வேலையிழந்து வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு நிதியுதவியும், உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.