ராமர் பெயரை சொல்லாமல் இந்தியாவில் எந்த காரியமும் நிறைவேறாது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

ராமர் பெயரை சொல்லாமல் இந்தியாவில் எந்த காரியமும் நிறைவேறாது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
Updated on
1 min read

ரோம் நாட்டு மொழியில் பேசியவர்கள் கூட இன்று ராம், ராம் என்கின்றனர், என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகளின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கரோனாவின் தீவிரப் பரவல் என்ற விமர்சனங்களுக்கு இடையே தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் பிராமணர்களுக்கு ஆதரவாக திடீரென காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதியும் குரல் கொடுத்து பரசுராமர் என்ற பெயரை ஆங்காங்கே உதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் உ.பி. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கோவிட்-19 அதிகமாகப் பரவல், அதற்கு எதிரான நடவடிக்கை இன்மை பற்றி கேள்விகள் எழுப்ப உ.பி.முதல்வர் யோகியோ ராமர் பற்றிப் பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகளான பகுஜன், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகியவை எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்காத முதல்வர் யோகி ஆதித்யநாத் ’ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இன்று பரசுராம் என்ற பெயரில் ராமர் பெயரை உச்சரிக்கின்றனர்.

ஒருகாலத்தில் ரோம் நாட்டு மொழியை பேசியவர்கள் இன்று ராம்-ராம் என்று கோஷம் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். ராமர் என்ற பெயரின் மகத்துவத்தை இப்போதுதான் உணர்கிறார்கள்.

ராமர் பெயரைச் சொல்லாமல் இந்த நாட்டில் எந்த ஒரு வேலையும் நடக்காது என்பதை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.

மீண்டும் சாதி அரசியல் செய்து சமூகத்தில் பிரிவினை விஷத்தை தூவுகிறார்கள். ஆனால் ராமர் பணி தொடரும்.

கரோனா வைரஸ் விவகாரத்தில் 23.78 கோடி மக்கள் தொகை கொண்ட உ.பி.யில் கரோனா பலி எண்ணிக்கை 2,700 தான், ஆனால் 1.80கோடி மக்கள் தொகை கொண்ட டெல்லியில் 4,235 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு கூறினார் யோகி ஆதித்யநாத்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in