Last Updated : 23 Aug, 2020 12:46 PM

 

Published : 23 Aug 2020 12:46 PM
Last Updated : 23 Aug 2020 12:46 PM

உ.பி.சட்டப்பேரவையில் 90 நிமிடங்களில், 27 மசோதாக்கள் விவாதங்கள் இன்றி நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளியுடன் கூட்டம் முடிந்தது

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்

லக்னோ

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை நேற்று கூடியபோது 90 நிமிடங்களில் 27 மசோாதாக்கள் விவாதங்கள் இன்றி நிறவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையிலும், குரல்வாக்கெடுப்பு மூலம் அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

இதில் குறிப்பாக போராட்டக்காரர்கள் பொது, தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் இழப்பீடு வசூலி்கும் மசோதா, பசுக் கொலை திருத்த மசோதா, கரோனா முன்களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் எந்தவிதமான விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது.

திங்கள்கிழமை(நாளை) வரை சட்டப்பேரைவக் கூட்டத்தொடர் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதால், தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

உ.பி. சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. கரோனாவில் பலியான அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தி அவை ஒத்திவைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சனிக்கிழமையான நேற்று மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவிதமான விவாதமும் இன்றி 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து பேரவைத் தலைவர் ஹிர்தியா நாராயன் தீட்சித் கூறுகையில் “ 60 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்களில் 27 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 300 எம்எல்ஏக்களுக்கு மேல் அவையில் இருந்தார்கள்.” எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச அரசு நிறைவேற்றிய மசோதாக்களில் முக்கியமானது பொதுச்சுகாதார மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மசோதாவாகும். இதன்படி கரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள்,சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ, அவர்கள் மீது எச்சில் துப்பினாலோ குற்றமாகக் கருதப்பட்டு கடும் தண்டனை விதிக்கப்படும்.

பசுக்கொலை தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி பசுக்களை இறைச்சிக்காக கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல், ஓட்டுநர், வாகன உரிமையாளர் தண்டனைக்குள்ளாவார்கள். ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுவரை சிறையும், ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

போராட்டங்களின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவர் எம்எல்ஏ மெகபூப் அலி நிருபர்களிடம் கூறுகையில் “ ஜனநாயக விதிகளை குழிதோண்டி புதைத்துவிட்டு இப்படிவிவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்றுவது இதற்கு முன் நடந்ததில்லை.” எனத் தெரிவித்தார்.

உ.பி.காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான அஜய் குமார் லாலு கூறுகையில் “ சட்டப்பேரவையை நடத்தக்கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். குற்றம்சாட்டுதல், பதில் குற்றம்சாட்டுதல்தான் பணி. ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புகளும் கொலை செய்யப்பட்டுள்ளன. ஒரேநாளில் 27 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதை நினைத்துப்பாருங்கள். இதன் அர்த்தம் என்ன. 27 மசோதாக்களை விவாதிக்க 12 நாட்கள் தேவைப்படும்.

கரோனா விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, வெள்ளம்,விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை ஆகியவை குறித்து விவாதிக்க இருந்தோம். ஆனால், விவாதத்தை புறக்கணித்து அரசுஓடுகிறது. அரசின் அதிகாரத்தால், எதிர்்கட்சி்களின் குரல்கள் அடக்கப்படுகின்றன. உ.பி. அரசியலில் இன்று கறுப்புநாள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x